சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை இளம் வீரர் சேர்ப்பு


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை இளம் வீரர் சேர்ப்பு
x
தினத்தந்தி 21 April 2022 9:15 PM GMT (Updated: 21 April 2022 9:15 PM GMT)

ஆடம் மில்னேவுக்கு பதிலாக இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா சேர்க்கப்பட்டு உள்ளார்.

மும்பை, 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் தசைப்பிடிப்பு காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். காயம் குணமடையாததால் அவர் எஞ்சிய போட்டிகளில் இருந்தும் ஒதுங்கினார். 

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடம் மில்னேவுக்கு பதிலாக இலங்கையை சேர்ந்த 19 வயது வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா சேர்க்கப்பட்டு உள்ளார். அவர் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். 

மதீஷா பதிரானா 2020 மற்றும் இந்த ஆண்டுக்கான 19 வயதுக்கு உட்பட்ட உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பிடித்து இருந்தார். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் ஸ்டைலில் பந்து வீசக்கூடிய பதிரானா இந்த ஆண்டு ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் 4 ஆட்டத்தில் 7 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இந்த சீசனில் சென்னை அணியில் அங்கம் வகிக்கும் 2-வது இலங்கை வீரர் பதிரானா ஆவார். ஏற்கனவே சுழற்பந்து வீச்சாளர் தீக்ஷனா சென்னை அணியில் விளையாடி வருகிறார்.

Next Story