2024 ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக சி.எஸ்.கே. இருக்கும் - சுனில் கவாஸ்கர்


2024 ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக சி.எஸ்.கே. இருக்கும் - சுனில் கவாஸ்கர்
x

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.

மும்பை,

இந்தியாவில் நடத்தப்படும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) தொடருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.

இந்த தொடரில் அதிகபட்ச கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணிகளாக திகழும் மும்பை மற்றும் சென்னை எப்படி செயல்படப் போகிறது என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. குறிப்பாக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கழற்றி விட்டுள்ள மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்துள்ளது. எனவே காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஹர்திக் பாண்ட்யா மும்பை அணிக்காக தன்னுடைய முதல் சீசனிலேயே கேப்டனாக கோப்பையை வென்று கொடுப்பாரா என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

மறுபுறம் கடந்த வருடம் தோனி தலைமையிலான சென்னை அணி குஜராத்தை தோற்கடித்து 5-வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த வரிசையில் இம்முறையும் தோனி தலைமையில் விளையாடும் அந்த அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு சி.எஸ்.கே. ரசிகர்களிடம் இருக்கிறது.

இந்நிலையில் மற்ற அணிகளை காட்டிலும் 2024 ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக சென்னை இருக்கும் என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு;-

"ஏலத்தின்போது சென்னை வாங்கிய வீரர்கள் அணியை பலப்படுத்துவதாக அமைகின்றனர். அவர்கள் கடந்த வருடம் வேகப்பந்து வீச்சு துறையில் தடுமாறியதை ஓரளவு சரி செய்துள்ளனர். அதேபோல அம்பத்தி ராயுடு ஓய்வுக்குப் பின் மிடில் ஆர்டரில் ஏற்பட்ட வெற்றிடத்தையும் அவர்கள் சரி செய்துள்ளதாக தெரிகிறது. இம்முறை அவர்களிடம் இளமையும் அனுபவமும் கலந்த அணி இருக்கிறது. எனவே கண்டிப்பாக டாப் 4 இடத்திற்கு சி.எஸ்.கே. வரும் என்று நான் கருதுகிறேன்.

எந்த அணியையும் நீங்கள் உறுதியாக வெற்றியாளர் என்று சொல்ல முடியாது. ஆனால் கடந்த 16 வருட ஐ.பி.எல். தொடரில் 12 முறை சென்னை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்கள். எனவே இம்முறை அவர்கள் 13-வது முறையாக வரலாம். தற்போது அவர்கள் அனைத்தையும் கவர் செய்து விட்டதாக கருதுவார்கள். குறிப்பாக ஷர்துல் தாக்கூரை அவர்கள் மீண்டும் வாங்கியுள்ளனர். அதனால் தீபக் சஹார் முழுமையாக விளையாடாவிட்டாலும் கவலை ஏற்படாது. ஏனெனில் அந்த இடத்தை தாக்கூர் பிடித்துக் கொள்வார்" என்று கூறினார்.


Next Story