இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி 445 ரன்களுக்கு ஆட்டமிழப்பு


இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி 445 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
x
தினத்தந்தி 16 Feb 2024 8:22 AM GMT (Updated: 16 Feb 2024 9:11 AM GMT)

இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ராஜ்கோட்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது . இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 10 ரன்களில் மார்க் வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சுப்மன் கில், மார்க் வுட் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து வந்த ரஜத் படிதாரும் 5 ரன்களில் வெளியேறினார்.

இதனால் இந்திய அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ரோகித்துடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் ரோகித் சதம் அடித்த நிலையில் 131 ரன்களில் ஆட்டம் இழந்தார். ரோகித்துக்கு பின் களமிறங்கிய அறிமுக வீரர் சர்பராஸ் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்து அசத்திய அவர் 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டில் வெளியேறினார்.

சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா சதம் அடித்து அசத்தினார். முதல் நாளில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 2வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்தியா தரப்பில் குல்தீப் 4 ரன், ஜடேஜா 112 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து துருவ் ஜூரெல் மற்றும் அஸ்வின் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அஸ்வின் 37 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ஜஸ்ப்ரீத் பும்ரா களம் இறங்கினார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜூரெல் 46 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து பும்ரா 26 ரன்களில் வெளியேறினார்.

இதனால் 130.5 ஓவர்களில் 445 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது. இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகள் , ரெஹன் அகமது 2 விக்கெட்டுகள் , ஆண்டர்சன் , ஹார்ட்லி , ஜோ ரூட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.


Next Story