வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் - இந்திய அணியில் அஸ்வின் சேர்ப்பு


வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் - இந்திய அணியில் அஸ்வின் சேர்ப்பு
x

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டிகள் டிரினிடாட்டில் வருகிற 22, 24, 27 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த போட்டிக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவான் தலைமை தாங்குகிறார். கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட், முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடரில் ஆடும் 18 பேர் கொண்ட இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கின்றனர். வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பார்ம் இன்றி தடுமாறும் விராட் கோலிக்கு மீண்டும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு தற்போது தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ஆர்.அஸ்வின் 20 ஓவர் அணியில் இடம் பிடித்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய், வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் இடத்தை தக்கவைத்துள்ளனர். இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் நீக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான இந்திய 20 ஓவர் அணி வருமாறு:-

ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், ஆர்.அஸ்வின், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங்.

இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டிரினிடாட்டில் வருகிற 29-ந் தேதியும், 2-வது போட்டி செயின்ட் கிட்சில் ஆகஸ்டு 1-ந் தேதியும், 3-வது போட்டி செயின்ட் கிட்சில் ஆகஸ்டு 2-ந் தேதியும் நடக்கிறது. கடைசி இரு ஆட்டங்கள் மட்டும் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் ஆகஸ்டு 6, 7 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது.


Next Story