ஆசியக் கோப்பை: இலங்கை-வங்காளதேசம் இன்று மோதல்


ஆசியக் கோப்பை: இலங்கை-வங்காளதேசம் இன்று மோதல்
x

கோப்புப்படம்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

பல்லகெலே,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.

இதன்படி இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. அதில் நேபாள அணியை துவம்சம் செய்து பாகிஸ்தான் அணி வெற்றியோடு தொடங்கியது. பாபர் அசாம், இப்திகர் அகமது ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.

இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பல்லகெலேயில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 2-வது லீக்கில் நடப்பு சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசத்தை சந்திக்கிறது.

இலங்கை அணியில் ஹசரங்கா, சமீரா, லாஹிரு குமாரா போன்ற முன்னணி பவுலர்கள் காயத்தால் விலகியது பாதிப்பு தான். இதே போல் வங்காளதேச அணியில் காயத்தால் தமிம் இக்பால், எபாதத் ஹூசைன் இடம் பெறவில்லை. வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீளாத லிட்டான் தாஸ் நேற்று ஒதுங்கினார். அவருக்கு பதிலாக அனமுல் ஹக் சேர்க்கப்பட்டுள்ளார்.

'மூத்த வீரர்கள் இல்லாதது பின்னடைவு தான். ஆனாலும் இது மற்ற வீரர்களுக்கு அருமையான வாய்ப்பாகும். அதை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள' என்று நம்புவதாக வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் குறிப்பிட்டார்.

இலங்கை அணியில் பதும் நிசாங்கா, கருணாரத்னே, அசலங்கா, குசல் மென்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா நல்ல நிலையில் உள்ளனர். உள்ளூர் மண்ணில் ஆடுவது இலங்கைக்கு கூடுதல் அனுகூலமாக இருக்கும். இவ்விரு அணிகளும் இதுவரை 51 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 40-ல் இலங்கையும், 9-ல் வங்காளதேசமும் வெற்றி கண்டுள்ளன. 2 ஆட்டத்தில் முடிவில்லை.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story