பாண்ட்யாவுக்கு எதிரான கோஷம்... ரசிகர்களிடம் கோலி காட்டிய சிக்னல்... வான்கடேவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்


பாண்ட்யாவுக்கு எதிரான கோஷம்... ரசிகர்களிடம் கோலி காட்டிய சிக்னல்... வான்கடேவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
x

மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்ப கூடாது என்று விராட் கோலி கேட்டுக்கொண்டுள்ளார்.

மும்பை,

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமனம் செய்யப்பட்டதில் இருந்து அந்த அணியின் ரசிகர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பி வருகின்றனர். 5 முறை கோப்பையை வென்ற ரோகித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்கிய மும்பை அணி நிர்வாகத்திற்கு ரசிகர்களின் எதிர்ப்பு தொடர்ந்து வருகிறது. அகமதாபாத் மைதானத்திலேயே ரசிகர்களின் எதிர்ப்பை சந்தித்த ஹர்திக் பாண்ட்யா, அதன்பின் ஐதராபாத், மும்பை உள்ளிட்ட மைதானங்களிலும் ரசிகர்களால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருகிறார்.

இந்திய மண்ணிலேயே இந்திய வீரருக்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பு வருவது இதுவே முதல்முறையாகும். இதனிடையே கடந்த போட்டியிலேயே மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா பவுண்டரி லைனில் இருந்தபோது, ரசிகர்கள் கோஷம் எழுப்ப வேண்டாம் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் ரசிகர்கள் இதுவரை ஹர்திக் எதிர்ப்பை கொஞ்சம் கூட குறைக்கவில்லை.

இந்த நிலையில் ஆர்.சி.பி. அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தபோது, ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார். அப்போது மும்பை ரசிகர்கள் எதிர்ப்பு கோஷத்தை தொடங்கினர். இதனை பார்த்த விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யாவும் இந்திய வீரர்தான். எதிர்ப்பை கைவிடுங்கள் என்று ரசிகர்களிடன் சிக்னல் மூலம் கூறினார்.

மேலும் போட்டி முடிந்தவுடன் ஹர்திக் பாண்ட்யாவை கட்டியணைத்து ஆறுதலும் கூறினார். விராட் கோலியின் இந்த செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story