நான் சதம் அடிக்கப்போவதை டு பிளெசிஸ் முன்பே கணித்து விட்டார் - விராட் கோலி
ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
ஐதராபாத்,
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 65வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி ஐதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் தரப்பில் ஹென்றிச் கிளாசெனும், பெங்களூரு தரப்பில் விராட் கோலியும் சதம் அடித்து அசத்தினர்.
நேற்று விராட் கோலி அடித்த சதம் ஐபிஎல் அரங்கில் அவர் பதிவு செய்யும் ஆறாவது சதமாகும். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சதம் பதிவு செய்திருந்த கிறிஸ் கெயிலின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். கெயிலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆறு சதங்களை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், நான் (விராட்) சதம் அடிக்கப்போவதை பாப் டு பிளெசிஸ் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்னரே கணித்து என்னிடம் கூறினார். அவர் கூறியதை போலவே நானும் சதம் அடித்தேன் என விராட் கோலி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
நாங்கள் பேட்டிங் செய்ய தொடங்குவதற்கு முன்பு பேட்டிங் வரிசையில் உள்ள முதல் 3 வீரர்களில் யாரோ ஒருவர் சதமடிக்க போகிறார் என என் உள்ளுணர்வு சொல்கிறது என பாஃபா என்னிடம் கூறினார். அது நீங்கள்தான் என நான் கூறினேன். அதற்கு இல்லை நீங்கள்தான் என்றார். அதுபோலவே நானும் சதம் விளாசினேன்.
இவ்வாறு விராட் கோலி கூறினார்.