"இந்த வெற்றி குறித்து வருங்கால தலைமுறையினர் பேசுவார்கள்" - ஹர்திக் பாண்டியா பெருமிதம்


இந்த வெற்றி குறித்து வருங்கால தலைமுறையினர் பேசுவார்கள் - ஹர்திக் பாண்டியா பெருமிதம்
x

image courtesy: ANI

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

அகமதாபாத்,

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பிரம்மாண்டமான இறுதி போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. 131 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 18.1 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

நேற்றைய ஆட்டத்தின் போது சிறப்பாக பந்துவீசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். இந்த நிலையில் அறிமுகமான முதல் சீசனிலே ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது:-

"இந்த சாம்பியன் பட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். ஏனென்றால் நாங்கள் ஒரு பாரம்பரியத்தை உருவாக்குவது பற்றி பேசினோம். இந்த வெற்றி குறித்து வருங்கால தலைமுறையினர் பேசுவார்கள். அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பயணத்தைத் தொடங்கியது குஜராத் அணி என்பதை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள். இது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று கூறினார்.

அவரது பந்து வீச்சு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஹர்திக், "நான் எதற்காக கடினமாக உழைத்தேனோ அதை சரியான நேரத்தில் காட்ட விரும்பினேன். பந்துவீச்சில் இன்று தான் நான் சிறப்பாக செயல்பட்ட நாள்.

எனக்கு எனது அணிதான் மிக முக்கியமானது. நான் எப்போதும் அப்படிப்பட்ட தனிமனிதனாகவே இருந்தேன். நான் ஒரு சீசனில் மோசமாக இருந்தும் எனது அணி வெற்றி பெற்றால் நான் அதை எடுத்துக்கொள்வேன். நான் எந்த நாளிலும் 160 ரன்கள் அடித்து கோப்பையை கைப்பற்றுவேன். என் அணியே எனக்கு முதலில் வரும் என்று கூறினார். மேலும் தன்னுடைய பேட்டிங் குறித்து பேசிய அவர், "பேட்டிங் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமான ஒன்றாகும் என்று கூறினார்.


Next Story