சஞ்சு சாம்சன் குறித்து மனம் திறந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்!
சஞ்சு எவ்வளவு திறமையான ஆட்டக்காரர் என அனைவருக்கும் தெரியும்.
மும்பை,
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் சஞ்சு சாம்சனும், பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங்கும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இந்த ஆட்டத்தில் சதமடித்து இந்திய அணி வெற்றி பெற உதவிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் சஞ்சு சாம்சன் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,'தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சஞ்சு அடித்த இந்த சதம் தேர்வுக்குழுவை அசரவைத்தது மட்டுமின்றி, அவரை தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. சஞ்சு எவ்வளவு திறமையான ஆட்டக்காரர் என அனைவருக்கும் தெரியும். அனைவரும் அவரது ஐபிஎல் ஆட்டங்களை குறித்து பேசுவார்கள். இந்த சதத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் அவர் தடம் பதித்துள்ளார்' என்று கூறினார்.