பெண்கள் பிரிமீயர் லீக்: 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி திரில் வெற்றி


பெண்கள் பிரிமீயர் லீக்: 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி திரில் வெற்றி
x
தினத்தந்தி 16 March 2023 5:10 PM GMT (Updated: 16 March 2023 8:14 PM GMT)

பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, டெல்லியை தோற்கடித்து பதிலடி கொடுத்தது.

மும்பை,

5 அணிகள் இடையிலான முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 14-வது லீக்கில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதின.

'டாஸ்' ஜெயித்த டெல்லி கேப்டன் மெக் லானிங் முதலில் குஜராத்தை பேட் செய்ய அழைத்தார். இதன்படி முதலில் களம் இறங்கிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. லாரா வோல்வார்த் (57 ரன், 45 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஆஷ்லி கார்ட்னெர் (51 ரன், 33 பந்து, 9 பவுண்டரி) அரைசதம் விளாசினர்.

பின்னர் 148 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி, தொடக்க ஆட்டக்காரர்கள் ஷபாலி வர்மா (8 ரன்), கேப்டன் மெக் லானிங் (18 ரன்) மற்றும் அலிஸ் கேப்சி (22 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (1 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை குறிப்பிட்ட இடைவெளியில் பறிகொடுத்து திணறியது.

பின்வரிசையில் மரிஜானே காப் (36 ரன்), அருந்ததி ரெட்டி (25 ரன்) ஆகியோரின் கணிசமான பங்களிப்பால் டெல்லி அணியினர் இலக்கை நெருங்கி வந்தனர். ஆனால் எதிரணியின் அபாரமான பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கை சமாளிக்க முடியாமல் அடங்கி விட்டனர். டெல்லி அணி 18.4 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் குஜராத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் முந்தைய லீக்கில் டெல்லியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது. குஜராத் தரப்பில் கிம் காரத், தனுஜா கன்வார், ஆஷ்லி கார்ட்னெர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

6-வது லீக்கில் ஆடிய குஜராத் 2 வெற்றி, 4 தோல்வி என்று 4 புள்ளிகளை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. டெல்லிக்கு இது 2-வது தோல்வியாகும்.

போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.


Next Story