இந்தியா-நியூசிலாந்து மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் : இன்று நடக்கிறது - மழையால் பாதிக்கப்பட வாய்ப்பா?


இந்தியா-நியூசிலாந்து மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் : இன்று நடக்கிறது - மழையால் பாதிக்கப்பட வாய்ப்பா?
x

Image Courtesy: BLACKCAPS

தினத்தந்தி 20 Nov 2022 12:24 AM GMT (Updated: 20 Nov 2022 12:31 AM GMT)

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இன்று நடக்கிறது.

மவுன்ட் மாங்கானு,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல், அஸ்வின் உள்பட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், 20 ஓவர் அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும், ஒருநாள் போட்டி அணிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக செயல்பட உள்ளனர்.

வெலிங்டனில் கடந்த வெள்ளிக்கிழமை நடக்க இருந்த இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மழை காரணமாக 'டாஸ்' கூட போடப்படாமல் ரத்தானது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணியில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்டும், பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தரும் நல்ல நிலையில் உள்ளனர்.

நியூசிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவானதாக விளங்குகிறது. பேட்டிங்கில் பின் ஆலென், டிவான் கான்வே, வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செலும், பந்து வீச்சில் லோக்கி பெர்குசன், டிம் சவுதி, மிட்செல் சான்ட்னெரும் அசத்தக்கூடியவர்கள்.

முதல் போட்டியை போல் இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மவுன்ட் மாங்கானுவில் இன்று மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் போட்டியில் 20 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 11-ல் இந்தியாவும், 9-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணியிலும் சிறந்த வீரர்கள் பலர் இருப்பதால் அதிரடியை எதிர்பார்க்கலாம்.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: இஷான் கிஷன், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து: பின் ஆலென், டிவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, சோதி, ஆடம் மில்னே, லோக்கி பெர்குசன்.


Next Story