ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானின் வெற்றிப்பயணத்துக்கு முட்டுக்கட்டை போடுமா மும்பை? - இன்று மோதல்


ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானின் வெற்றிப்பயணத்துக்கு முட்டுக்கட்டை போடுமா மும்பை? - இன்று மோதல்
x

இன்று நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ஜெய்ப்பூர்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் குறிப்பிட்ட 5 அணிகளுடன் 2 முறையும், 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். 'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு ஒரு அணி குறைந்தது 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றாக வேண்டும்.

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த கிரிக்கெட் திருவிழாவில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. குஜராத் டைட்டன்சுக்கு எதிராக மட்டுமே தோல்வியை தழுவியது. இரு சதம் அடித்துள்ள ஜோஸ் பட்லர், கேப்டன் சாம்சன், ரியான் பராக், ரோமன் பவெல், பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், சாஹல், அவேஷ்கான் சூப்பர் பார்மில் உள்ளனர். ஜெய்ஸ்வாலும் (7 ஆட்டத்தில் 121 ரன்) பழைய நிலைக்கு திரும்பினால் அந்த அணியின் பலம் இன்னும் அதிகரிக்கும். முந்தைய கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 224 ரன் இலக்கை கடைசி பந்தில் சேசிங் செய்து ராஜஸ்தான் சாதனை படைத்தது. மேலும் ராஜஸ்தானுக்கு இந்த சீசனில் உள்ளூரில் விளையாடும் கடைசி ஆட்டம் இது என்பதால் வெற்றியுடன் நிறைவு செய்வதில் தீவிரமாக இருப்பார்கள்.

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 ஆட்டங்களில் வரிசையாக தோற்றது. அடுத்த 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்று மீண்டு வருகிறது. ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ரன்வேட்டையை தொடங்கி விட்டனர். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (13 விக்கெட்), ஜெரால்டு கோட்ஜீ (12 விக்கெட்) மிரட்டுகிறார்கள். கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் செயல்பாடு தான் பெரிய அளவில் இல்லை. அவரும் அசத்தினால் மும்பை அபாயகரமான அணியாக உருவெடுத்து விடும்.

இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். ராஜஸ்தானின் வீறுநடைக்கு மும்பை அணை போடுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.


Next Story