ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் 10-வது முறையாக 400 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை


ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் 10-வது முறையாக 400 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை
x

Image Courtesy : @RCBTweets

ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும்.

ஐதராபாத்,

10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஐதராபாத்தில் அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முழுமையாக ஆடி 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று முந்தைய தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அரைசதம் (51 ரன்கள்) அடித்தார். அவர் 22 ரன் எடுத்த போது நடப்பு தொடரில் 400 ரன்களை கடந்தார். ஐ.பி.எல். சீசன் ஒன்றில் அவர் 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் அதிக முறை 400 ரன்னுக்கு மேல் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்த இடத்தில் சுரேஷ் ரெய்னா, டேவிட் வார்னர் (தலா 9 முறை) உள்ளனர்.


Next Story