ஐ.பி.எல்.: சொந்த மண்ணில் வெற்றிப் பாதைக்கு திரும்புமா பெங்களூரு? லக்னோவுடன் இன்று மோதல்


ஐ.பி.எல்.: சொந்த மண்ணில் வெற்றிப் பாதைக்கு திரும்புமா பெங்களூரு? லக்னோவுடன் இன்று மோதல்
x

image courtesy: twitter/ @LucknowIPL/@RCBTweets

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் பெங்களூரு - லக்னோ அணிகள் மோத உள்ளன.

பெங்களூரு,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள 15-வது லீக் ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோத உள்ளன. இந்த ஆட்டம் இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் தோற்றது. சொந்த மண்ணில் நடந்த அடுத்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை பதம் பார்த்தது. முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் சரண் அடைந்தது. அந்த ஆட்டத்தில் பெங்களூரு நிர்ணயித்த 183 ரன் இலக்கை கொல்கத்தா 16.5 ஓவர்களில் எளிதில் எட்டிப்பிடித்தது.

பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி நிலைத்து நின்று ஆடி தொடர்ச்சியாக 2 அரைசதம் அடித்து சூப்பர் பார்மில் உள்ளார். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி கைகொடுக்கிறார். அதே சமயம் கேப்டன் பிளிஸ்சிஸ், கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல், ரஜத் படிதார் ஆகியோரது நிலையற்ற ஆட்டம் பாதகமாக உள்ளது. இதேபோல் பந்து வீச்சில் முகமது சிராஜ், அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது முதலாவது லீக்கில் 20 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் பணிந்தது. அடுத்த ஆட்டத்தில் 21 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய லக்னோ அணி 199 ரன்கள் குவித்ததுடன் பஞ்சாப்பை 178 ரன்னில் அடக்கி முதல் வெற்றியை பெற்றது.

கடந்த ஆட்டத்தில் லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பை நிகோலஸ் பூரன் கவனித்தார். கேப்டன் லோகேஷ் ராகுல் இம்பேக்ட் வீரராக ஆடினார். விக்கெட் கீப்பராக குயின்டாக் டி காக் செயல்பட்டார். காயத்தில் இருந்து மீண்டு வந்த லோகேஷ் ராகுலின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு இன்றைய ஆட்டத்திலும் தொடருமா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

பேட்டிங்கில் குயின் டான் டி காக், நிகோலஸ் பூரன், குருணல் பாண்ட்யா நம்பிக்கை அளிக்கிறார்கள். தேவ்தத் படிக்கல், ஸ்டோனிஸ், ஆயுஷ் பதோனி ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. பந்து வீச்சில் மொசின் கான், நவீன் உல்-ஹக், மயங்க் யாதவ் வேகப்பந்தில் அச்சுறுத்தக்கூடியவர்கள். சொந்த மண்ணில் நடைபெற உள்ள வெற்றிப் பாதைக்கு திரும்ப பெங்களூரு அணியும், வெற்றி உத்வேகத்தை தொடர லக்னோ அணியும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.


Next Story