அதிரடியாக ஆடும் திறன் பாண்ட்யாவிடம் குறைந்து வருகிறது - இந்திய முன்னாள் வீரர்


அதிரடியாக ஆடும் திறன் பாண்ட்யாவிடம் குறைந்து வருகிறது - இந்திய முன்னாள் வீரர்
x

Image Courtesy: AFP 

தினத்தந்தி 23 April 2024 6:39 AM GMT (Updated: 23 April 2024 10:14 AM GMT)

நடப்பு ஐ.பி.எல் தொடரில் பாண்ட்யா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆடி வருகிறது.

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல் தொடரில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற 38வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி ஜெய்ஸ்வாலின் அதிரடி சதம் மூலம் 18.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஜெய்ஸ்வால் 104 ரன்கள் குவித்தார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய சந்தீப் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் பாண்ட்யா தலைமையில் ஆடி வரும் மும்பை அணி இதுவரை 8 லீக் ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 5 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் மும்பை அணி பேட்டிங் செய்த போது இறுதிகட்டத்தில் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்க்காதது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்ட்யா நல்ல பினிஷிங் கொடுக்கத் தவறியதால் கடைசியில் எக்ஸ்ட்ரா 20 ரன்களை எடுக்காதது மும்பையின் தோல்விக்கு முக்கிய காரணமானது என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் தோனிக்கு பின் இந்தியாவின் சிறந்த பினிஷர் என்று பாராட்டப்பட்ட ஹர்திக் பாண்ட்யா காயத்தை சந்தித்ததிலிருந்தே சமீப காலங்களில் பேட்டிங்கில் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறி வருகிறார். இந்நிலையில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி பினிஷிங் செய்யும் திறமை பாண்ட்யாவிடம் குறைந்து விட்டதாக இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, ஹர்திக் பாண்டியாவின் அடிக்கும் திறமை கீழே சென்று கொண்டிருக்கிறது. பெரிய கண்ணோட்டத்தில் மிகப்பெரிய கவலைக்குரிய அம்சமாகும். வான்கடே மைதானத்தில் அவர் வித்தியாசமாக செயல்படுகிறார். ஆனால் சிறிய உதவி இல்லாத பிட்ச்கள் அவருக்கு கவலையாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Next Story