டி20 உலகக் கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி இலங்கை அணி முதல் வெற்றி


டி20 உலகக் கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி இலங்கை அணி முதல் வெற்றி
x

Image Courtesy: Twitter @ICC 

நமிபியா அணியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்த இலங்கை அணி தற்போது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.

கீலாங்,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற தொடக்க சுற்று போட்டி 2வது ஆட்டத்தில் இலங்கை, ஐக்கிய அரபு அமீரக அணிகள் விளையாடி மோதின. மெல்போர்ன் நகரில் உள்ள கீலாங் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் பதும் நிசாங்க 60 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். தனஞ்செய டி செல்வா 33 ரன்னும், குசால் மெண்டிஸ் 18 ரன்னும் குசால் மெண்டிஸ் 18 ரன்னும் அடித்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஐக்கிய அரபு அமீரக அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட்களை சாய்த்தார். ஜாகூர்கான் 2 விக்கெட்களையும், அப்சல்கான், ஆர்யன் லக்ரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதை தொடர்ந்து 153 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐக்கிய அரபு அமீரக அணி களமிறங்கியது. இலங்கை அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் யு.ஏ.இ அணி வீரர்கள் வாசீம் (2 ரன்கள்), ஆர்யன் லக்ரா (1 ரன்), கேப்டன் ரிஸ்வான் (1 ரன்), விரித்தியா அரவிந்த் (9 ரன்கள்) வந்த வேகத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்த அமீரக அணி இறுதியில் 17.1 ஓவர்களில் 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அப்சல் கான் 19 ரன்களும், ஜுனைட் சித்திக் 18 ரன்களும் அடித்தனர்.

இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா மற்றும் சமீரா தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர். இதன் மூலம் இலங்கை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் நமிபியா அணியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்த இலங்கை அணி தற்போது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.


Next Story