இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது..!


இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது..!
x

கோப்புப்படம்

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் இன்று நடக்கிறது.

லண்டன்,

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றியை ருசித்தது. நாட்டிங்காமில் நடந்த 3-வது மற்றும் கடைசி போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி கண்டது.

இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்ற உத்வேகத்துடன் களம் காணும் இந்திய அணி அதேமாதிரி அச்சமின்றி அதிரடியாக ஆடும் பாணியை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யாவும், பந்து வீச்சில் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹலும் நல்ல நிலையில் உள்ளனர். கடைசி 20 ஓவர் போட்டியின் போது இடுப்பு பகுதியில் காயம் அடைந்த விராட்கோலி முதலாவது ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபகாலமாக ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி கடந்த மாதம் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 498 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. அத்துடன் சமீபத்தில் நடந்த இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இலக்கை விரட்டிபிடிக்கையில் அதிரடியாக செயல்பட்டு அசத்தியது.

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஆடாத பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோர் திரும்பி இருப்பது இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை மேலும் பலப்படுத்தும். உள்ளூர் சூழலை சாதகமாக பயன்படுத்தி இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது 'ஸ்விங்' தாக்குதல் மூலம் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் ரன்மழைக்கு பஞ்சம் இருக்காது என்று சொல்லலாம்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 103 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 55 ஆட்டத்திலும், இங்கிலாந்து அணி 43 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 2 ஆட்டம் டையில் முடிந்தது. 3 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட்கோலி அல்லது ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் அல்லது பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

இங்கிலாந்து: ஜாசன் ராய், பேர்ஸ்டோ, ஜோ ரூட், லிவிங்ஸ்டன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, சாம் கர்ரன், டேவிட் வில்லி, மேட் பார்கின்சன், ரீஸ் டாப்லே.

இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென் 3, 4 ஆகிய சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story