பாண்ட்யாவிடம் இருந்து கேப்டன்சியை பறித்து ரோகித்திடம் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது - இந்திய முன்னாள் வீரர்


பாண்ட்யாவிடம் இருந்து கேப்டன்சியை பறித்து ரோகித்திடம் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது - இந்திய முன்னாள் வீரர்
x

image courtesy:PTI

தோல்விகளாலும், ரசிகர்களின் எதிர்ப்பாலும் கேப்டன் பாண்ட்யா அழுத்தத்தை சந்தித்துள்ளார் என மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

மும்பை,

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரு சீசன்களில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பாண்ட்யா இந்த சீசனில் பரிமாற்றம் முறையில் குஜராத் அணியில் இருந்து வாங்கப்பட்டு மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கடந்த சீசன் வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும், அந்த அணிக்காக 5 ஐ.பி.எல் கோப்பைகளை வென்று கொடுத்தவருமான ரோகித் சர்மா இந்த சீசனில் சாதாரண வீரராக விளையாடி வருகிறார். ரோகித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு பாண்ட்யாவை கேப்டனாக்கிய முடிவை பல மும்பை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும், மும்பை இந்தியன்ஸ் போட்டிகள் நடைபெறும் அனைத்து மைதானங்களிலும் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மும்பை அணி இதுவரை விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளதால் பாண்ட்யாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தோல்விகளாலும், ரசிகர்களின் எதிர்ப்பாலும் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அழுத்தத்தை சந்தித்துள்ளார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது :

"தற்போது ஹர்திக் பாண்ட்யா மிகப்பெரிய அழுத்தத்தில் இருக்கிறார் என்பது சில விசயங்களின் மூலம் தெரிகிறது. மேலும் ஒவ்வொரு மைதானத்திலும் ரசிகர்களின் எதிர்ப்பை உணரும் அவர் அணியை வழி நடத்துவதிலும் ஆட்டம் காணுகிறார். நான் பெரிய விஷயம் ஒன்றை சொல்லப் போகிறேன். இந்த ஆறு நாள் இடைவெளியில் பாண்ட்யாவிடம் இருந்து கேப்டன்சியை பறித்து ரோகித் சர்மாவிடம் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த மாற்றம் நிச்சயம் நடக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஐ.பி.எல். உரிமையாளர்கள் குறித்து எனக்கு தெரிந்தவரை அவர்கள் இதுபோன்ற முடிவுகளை எடுக்க தயங்க மாட்டார்கள். எனவே நிச்சயம் ரோகித் சர்மா மீண்டும் கேப்டன் பதவியை பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஐந்து கோப்பைகளை பெற்றுக் கொடுத்த ஒரு கேப்டனை மாற்றி விட்டு தற்போது புதிய கேப்டன் தலைமையில் ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை. அவரது கேப்டன்சி சரியில்லை நிறைய தவறுகள் நடக்கின்றன'' என்று கூறினார்.


Next Story