விராட் கோலி 3-வது இடத்திலேயே விளையாட வேண்டும்..அதை மாற்றினால்...- சேவாக்


விராட் கோலி 3-வது இடத்திலேயே விளையாட வேண்டும்..அதை மாற்றினால்...- சேவாக்
x
தினத்தந்தி 29 April 2024 11:54 AM GMT (Updated: 29 April 2024 11:58 AM GMT)

டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என்று கங்குலி கூறியிருந்தார்.

புதுடெல்லி,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

இந்த தொடர் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அந்த அணியில் விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களை தேர்வு செய்யக்கூடாது என்று சில கருத்துகள் காணப்படுகின்றன.

அந்த சூழ்நிலையில் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி கொஞ்சம் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். எனவே ஸ்லோவான பிட்சுகளைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் 2024 டி20 உலகக்கோப்பையில் அவரை தேர்வுக் குழு கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன.

ஆனால் உலகின் அனைத்து மைதானங்களிலும் அசத்தக்கூடிய திறமையை கொண்ட விராட் கோலி இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு அவசியம் என்று சில முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர். அதில் சவுரவ் கங்குலி கேப்டன் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் விராட் கோலி 3-வது இடத்திலேயே விளையாட வேண்டும் என்று சேவாக் கேட்டுக் கொண்டுள்ளார். ஒருவேளை அதை மாற்றினால் 2007-ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் சச்சினை 4-வது இடத்தில் களமிறக்கியதைப் போன்ற குளறுபடி ஏற்படும் என்று சேவாக் தெரிவித்துள்ளார். எனவே அது இந்திய அணிக்கு தோல்வியை கூட கொடுக்கலாம் என்று எச்சரிக்கும் சேவாக் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"நான் இந்திய அணியில் இருந்தால் விராட் கோலியை தொடக்க ஆட்டக்காரராக அனுப்ப மாட்டேன். அவரை நான் 3-வது இடத்தில் விளையாட வைப்பேன். ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் ஓபனிங்கில் விளையாட வேண்டும். எப்போதும் மிடில் ஓவர்கள் உங்களுக்கு பிரச்சனையை கொடுக்கும். ஆரம்பத்திலேயே விக்கெட் விழுந்தால் நாம் பவர் பிளேவில் நிதானமாக விளையாட வேண்டும் என்பது விராட் கோலிக்கு தெரியும். அதேபோல தாமதமாக விக்கெட்டுகள் விழுந்தாலும் நீங்கள் தொடர்ந்து வேகமாக விளையாடுங்கள் என்று அவரிடம் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் சொல்லலாம்.

அதை செய்யக்கூடிய திறன் விராட் கோலியிடம் உள்ளது. 2007-ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் சச்சின் தன்னுடைய ஓப்பனிங் இடத்தை விட்டு 4வது இடத்தில் விளையாடினார். மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு விருப்பமில்லை என்றாலும் அணிக்காக சச்சின் அதை செய்தார். எனவே ஏற்கனவே உங்களிடம் 2 நல்ல துவக்க வீரர்கள் இருக்கும்போது விராட் கோலி 3-வது இடத்தில் விளையாடலாம். துவக்க வீரர்கள் கொடுக்கும் நல்ல துவக்கத்தை விராட் கோலியால் தொடர்ந்து எடுத்துச் செல்ல முடியும். அதற்காக விராட் கோலி கவலைப்படுவார் என்று நான் நினைக்கவில்லை" என கூறினார்.


Next Story