எங்கள் அணியில் அவர் இருப்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்... ஏனெனில்...- பாண்ட்யா


எங்கள் அணியில் அவர் இருப்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்... ஏனெனில்...- பாண்ட்யா
x

image courtesy:PTI

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூருவுக்கு எதிராக மும்பை வெற்றி பெற்றது.

மும்பை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி படிதார், பாப் டு பிளஸ்சிஸ், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அரை சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை வெறும் 15.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 69 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 52 ரன்களும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பாண்ட்யா கூறுகையில்: "எப்பொழுதுமே ஒரு வெற்றியை பெறுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றது சிறப்பாக இருந்தது. இம்பேக்ட் பிளேயர் ரூல்ஸ் இருப்பதன் மூலம் ஒரு கூடுதல் பவுலரை அணியில் சேர்த்து விளையாட முடிகிறது. அது எனக்கும் சில சமயங்களில் சாதகமாக அமைகிறது.

ஒருவேளை ஒரு பவுலர் அந்த நாளில் சிறப்பாக பந்துவீசவில்லை என்றால் மற்ற பவுலர்களை வைத்து அதனை சமாளித்து விடலாம். இந்த போட்டியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அதேபோன்று நான் டீம் மீட்டிங்கில் போட்டியை சீக்கிரமே முடிக்க வேண்டும் என்று பேசியதே கிடையாது. ஆனாலும் ரன் ரேட்டை அதிகப்படுத்தி விளையாடி எங்கள் அணியின் வீரர்கள் ஆட்டத்தை முடித்துக் கொடுத்துள்ளார்கள். அதுதான் ஒரு அணிக்கு அழகாக நான் பார்க்கிறேன்.

பும்ரா எங்கள் அணியில் இருப்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் எப்போது அவரை பந்துவீச அழைத்தாலும் மிகச்சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்து தருகிறார். போட்டிக்கு முன்னதாக நிறையவே பயிற்சி செய்யும் அவர் போட்டியின்போதும் எங்களுக்கு பெரிய அனுகூலத்தை தருகிறார். சூர்யகுமார் யாதவ் மீண்டும் வந்து அரைசதம் அடித்தது எங்களது அணியின் பலத்தை பெரியளவில் நீட்டித்துள்ளது. இனிவரும் போட்டிகளில் நாங்கள் இதே வெற்றியை தொடர்வோம்" என்று கூறினார்.


Next Story