அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்குமா பெங்களூரு...ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்...!
ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு-ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.
ஜெய்ப்பூர்,
ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூரில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.
அந்த அணியின் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 575 ரன்கள்), ஜோஸ் பட்லர், கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மயரும், பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், ஆர்.அஸ்வின், டிரென்ட் பவுல்ட், சந்தீப் ஷர்மாவும் நல்ல பார்மில் இருக்கின்றனர்.
பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளியுடன் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் கேப்டன் பிளிஸ்சிஸ் (576 ரன்கள்), விராட்கோலி (420 ரன்கள்) மேக்ஸ்வெல்லும், பந்து வீச்சில் முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல், ஹசரங்கா, கரண் ஷர்மா, விஜய்குமார் வைஷாக்கும் வலுசேர்க்கிறார்கள்.
ராஜஸ்தானுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள பெங்களூரு அணி கூடுதல் நம்பிக்கையுடன் இருக்கும். முக்கியமான ஆட்டம் இந்த ஆட்டம் இரு அணிக்கும் மிகவும் முக்கியமானதாகும்.
இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் இரு அணிகளும் தங்களது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். எனவே இந்த பலப்பரீட்சையில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 14-ல் பெங்களூருவும், 12-ல் ராஜஸ்தானும் வென்று இருக்கின்றன. 3 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது.