உலக கோப்பை ஆடும் லெவனில் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரையும் ஆட வைப்பேன் - சுனில் கவாஸ்கர்


உலக கோப்பை ஆடும் லெவனில் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரையும் ஆட வைப்பேன் - சுனில் கவாஸ்கர்
x

கோப்புப் படம்

தினத்தந்தி 13 Sep 2022 6:18 AM GMT (Updated: 17 Sep 2022 2:20 PM GMT)

உலக கோப்பை ஆடும் லெவனில் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரையும் ஆட வைப்பேன் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

மும்பை,

8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

இந்த நிலையில் இந்த உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்திய அணியில் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் என இரு விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். இவர்கள் இருவரையும் ஒரு சேர அணியில் ஆட வைக்க முடியுமா என பல்வேற் கேள்விகள் வருகின்றன. இந்நிலையில் உலக கோப்பைக்கான அணி குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் போது,

நான் என்னுடைய ஆடும் லெவனில் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரையும் ஆட வைப்பேன். 5வது இடத்தில் ரிஷப் பந்த், 6வது இடத்தில் ஹர்த்திக் பாண்ட்யா, 7வது இடத்தில் தினேஷ் கார்த்திக்கை ஆட வைப்பேன். நான் ஹர்த்திக் மற்றும் 4 பந்து வீச்சாளர்களுடன் செல்வேன். நீங்கள் கடினமான முடிவுகளை எடுக்கவில்லை என்றால், எப்படி வெற்றி பெறுவீர்கள்?. எல்லா துறைகளிலும் நீங்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும், அப்போது தான் வெற்றி பெற முடியும் என்றார்.

மேலும், இந்திய அணி நல்ல அணி. மேலும் சமநிலையான அணி. உலக கோப்பையை அவர்கள் வெல்வார்கள் என அதிக நம்பிக்கை உள்ளது. ஆசிய கோப்பையில் நடந்தது ஒரு எச்சரிக்கை. அவர்கள் உலக கோப்பையின் மூலம் மீண்டு வருவார்கள் என நான் நம்புகிறேன். தேர்வு செய்த அணியை நாம் ஆதரிக்க வேண்டும். நாம் அவர்களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும்.

ஆசிய கோப்பையில் நமது பிரச்சனை என்னவென்றால் இலக்கை கட்டுப்படுத்த பந்து வீச்சாளர்கள் இல்லை. இப்போது பும்ரா, ஹர்சல் பட்டேல் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இவர்கள் இருவரும் இலக்கை கட்டுப்படுத்த கூடிய வீரர்கள். மேலும் நீங்கள் முதலில் பந்துவீசினால் அவர்களால் முதல் சில ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இவர்கள் இருவரின் வருகையால் அணி மேலும் வலுப்பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story