தொடரில் முன்னிலை பெறுமா இந்தியா? இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்


தொடரில் முன்னிலை பெறுமா இந்தியா? இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
x

நடப்பு தொடரில் முதல்முறையாக இங்கிலாந்து 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட உள்ளது.

ராஜ்கோட்,

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடந்த தொடக்க டெஸ்டில் 28 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஒரு வாரம் ஓய்வுக்கு பிறகு ராஜ்கோட் வந்தடைந்த வீரர்கள் இரு தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய அணியில் மாற்றம்

முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியில் ஆலி போப் (196 ரன்), இடக்கை சுழற்பந்து வீச்சாளர் டாம் ஹார்ட்லீ (இரு இன்னிங்சையும் சேர்த்து 9 விக்கெட்) ஹீரோவாக ஜொலித்தனர். 2-வது டெஸ்டில் பதிலடி கொடுத்த இந்திய அணியில் ஜெய்ஸ்வால் (209 ரன்), சுப்மன் கில் (104 ரன்), வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (9 விக்கெட்) மிரட்டினர். வெற்றியை தொடரும் உத்வேகத்துடன் ஆயத்தமாகும் இந்திய அணியில் தவிர்க்க முடியாத காரணங்களால் சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. ரன் எடுக்க தடுமாறும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு 'கல்தா' கொடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடர் முழுவதும் விராட் கோலி ஒதுங்கி விட்டார். காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் லோகேஷ் ராகுல் விலகியுள்ளார். அதே சமயம் தசைப்பிடிப்பில் இருந்து குணமடைந்துள்ள சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா அணியில் இணைந்துள்ளார். விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத்தின் பேட்டிங் மெச்சும்படி இல்லாததால் அவரை மாற்ற அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.

இதன்படி பார்த்தால் முதல்தர கிரிக்கெட்டில் ரன்மழை பொழியும் சர்ப்ராஸ் கான், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜடேஜாவின் வருகையால் அக்ஷர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ் ஆகியோரில் ஒருவரின் இடம் காலியாகும்.

பேட்டிங்கை பொறுத்தவரை கேப்டன் ரோகித் சர்மா கடைசி 8 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவர் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம். பொதுவாக இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது என்பதால், ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார் பெரிய அளவில் ஸ்கோர் குவிப்பதை எதிர்நோக்கி உள்ளனர். ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு இது சொந்த ஊராகும். இதனால் அவரது ஆட்டம் கவனத்தை ஈர்க்கும். மற்றபடி பந்து வீச்சில் பும்ரா, அஸ்வின், முகமது சிராஜ் கைவரிசை காட்ட காத்திருக்கிறார்கள்.

இங்கிலாந்து எப்படி?

'பாஸ்பால்' என்ற தடாலடியான பேட்டிங் யுக்தியை கையில் எடுத்துள்ள இங்கிலாந்துக்கு அத்தகைய புதிய அணுகுமுறை முதல் டெஸ்டில் கைகொடுத்தது. ஆனால் 2-வது டெஸ்டில் அவர்களின் பாச்சா பலிக்கவில்லை. அபுதாபிக்கு சென்று ஒரு வாரம் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு புத்துணர்ச்சியுடன் திரும்பியுள்ள இங்கிலாந்து வீரர்கள் தொடரில் மறுபடியும் முன்னிலை பெறுவதில் தீவிரம் காட்டுகிறார்கள்.

முதல் இரு டெஸ்டில் பேட்டிங்கில் சொதப்பிய முன்னாள் கேப்டன் ஜோ ரூட் (29, 2, 5, 16 ரன்) மற்றும் பேர்ஸ்டோ ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறார்கள். அவர்கள் ரன்வேட்டை நடத்தினால் இங்கிலாந்து மேலும் வலுவடையும். பாகிஸ்தான் வம்சாவளியான சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அகமது ஒரு முறை மட்டுமே இந்தியாவுக்கு வந்து செல்லும் விசா பெற்றிருந்த நிலையில், அவர் அபுதாபிக்கு சென்று விட்டு மீண்டும் இந்தியா வந்ததால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலையீட்டின் பேரில் அவரது விசா பிரச்சினை இப்போது சரி செய்யப்பட்டு உள்ளது. அதனால் 3-வது டெஸ்டில் அவர் இறங்குவதில் நிலவிய சிக்கல் நீங்கியதால் இங்கிலாந்து தரப்பு நிம்மதியடைந்துள்ளது.

அதிவேகமாக பந்து வீசக்கூடிய மார்க்வுட் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் இளம் சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர் வெளியே உட்கார வைக்கப்படுகிறார்.

முந்தைய டெஸ்டில் 5 விக்கெட்டுகளை சாய்த்த மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடத்தை தக்க வைத்துள்ளார். இதன் மூலம் நடப்பு தொடரில் முதல்முறையாக இங்கிலாந்து 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட உள்ளது. ஹார்ட்லீ, ரெஹான் அகமதுவுடன் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் ஜோ ரூட்டும் சுழல் தாக்குதலை தொடுப்பார்.

பென் ஸ்டோக்சுக்கு இது 100-வது டெஸ்டாகும். ஆனால் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. '100 டெஸ்ட் இன்னொரு நம்பர் அவ்வளவு தான். அடுத்த டெஸ்ட் 101-ஆக இருக்கப்போகிறது. அதனால் அது பெரிய அளவில் வித்தியாசத்தை ஏற்படுத்தப்போவதில்லை. ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது' என்று ஸ்டோக்ஸ் குறிப்பிட்டார்.

மேலும் ஸ்டோக்ஸ், 'நீண்ட காலத்திற்கு பிறகு இங்கு (ராஜ்கோட்) விளையாடுகிறோம் என்பது தெரியும். ஆடுகளத்தை பார்க்க நன்றாகவே உள்ளது. முந்தைய நாள் இங்கிலாந்தில் உள்ள ஆடுகளம் போன்று இருந்தது. இன்று (நேற்று) வேறு விதமாக உள்ளது. என்றாலும் 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஆடினால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறோம். கொஞ்சம் ரிவர்ஸ் ஸ்விங்கும் ஆகலாம் என்பதால் மார்க்வுட்டை கொண்டு வநதுள்ளோம்' என்றார்.

மொத்தத்தில் இங்கிலாந்து, இந்தியா அணிகள் நீயா-நானா? என்று வரிந்து கட்டுவதால் களத்தில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

மைதானம் எப்படி?

28 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட ராஜ்கோட் மைதானத்தில் இதுவரை 2 டெஸ்ட் நடந்துள்ளது.

2016-ம் ஆண்டு நடந்த இந்தியா- இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் டிராவில் முடிந்தது. அதில் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் சதம் அடித்தனர். 2018-ம் ஆண்டு நடந்த டெஸ்டில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பந்தாடியது. விராட் கோலி, பிரித்வி ஷா, ரவீந்திர ஜடேஜாவின் சதத்தோடு அந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 649 ரன்கள் குவித்தது நினைவு கூரத்தக்கது.

ஆடுகளத்தை பொறுத்தவரை முதல் இரு நாட்கள் பேட்டிங்கும், அதன் பிறகு படிப்படியாக சுழற்பந்து வீச்சும் ஒத்துழைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்ப்ராஸ் கான், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ் அல்லது அக்ஷர் பட்டேல், பும்ரா, முகமது சிராஜ்.

இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லீ, மார்க்வுட், ஆண்டர்சன்.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story