முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா தென் ஆப்பிரிக்கா.. 2வது அரையிறுதியில் ஆஸி-யுடன் இன்று மோதல்


முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா தென் ஆப்பிரிக்கா.. 2வது அரையிறுதியில் ஆஸி-யுடன் இன்று மோதல்
x

இன்று நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

கொல்கத்தா,

இந்தியாவில் நடைபெறுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில், இன்று 2-வது அரையிறுதி ஆட்டம் நடைபெற உள்ளது. இதில் புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் 3-ம் இடங்களை பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை, முதல் இரண்டு லீக் ஆட்டத்தில் மட்டும் தோல்வியடைந்த அந்த அணி, அடுத்த அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. டேவிட் வார்னர், மிட்சேல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் பார்முக்கு திரும்பினால் அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும்.

பந்துவீச்சில் கேப்டன் கம்மின்ஸ், ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஹேசில்வுட் எதிரணியை மிரட்டுகின்றனர். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் ஆஸ்திரேலிய அணி சரிசம பலத்துடன் காணப்படுகிறது. 5 முறை உலகக்கோப்பை வெற்றியாளர்களான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது தென் ஆப்பிரிக்க அணிக்கு எளிதான காரியமாக இருக்காது.

தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை அந்த அணி பேட்டிங்கில் அசுர பலத்துடன் காணப்படுகிறது. டி காக், வென் டர் டசன், மார்க்ரம், கிளாசன், மில்லர் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அனைவரும் அதிரடியில் மிரட்டக்கூடியவர்கள். பவுலிங்கில் ரபாடா அனுபவத்தை காட்டுகிறார். இங்கிடி, யான்சென், மஹராஜ் ஆகியோரும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.

ஆனால் தென் ஆப்பிரிக்க அணி, இலக்கை சேசிங் செய்வதில் தடுமாறுகிறது. முதலில் பேட்டிங் செய்தால் பெரிய ஸ்கோரை எட்டி அபாயகரமான அணியாக காணப்படும் தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது பேட்டிங்கில் சொதப்பியுள்ளது.

ஆகையால், இந்த ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என கூறலாம். டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பை வெல்லும் முனைப்பில் தென் ஆப்பிரிக்காவும், 6-வது முறையாக கோப்பைவை வெல்லும் ஆசையில் ஆஸ்திரேலியாவும் களமிறங்க உள்ளதால், இந்த அரையிறுதி ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்க உள்ளது.


Next Story