சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கே.எல்.ராகுல் புதிய சாதனை


சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கே.எல்.ராகுல் புதிய சாதனை
x

Image Tweeted By @BCCI

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 ஆயிரம் ரன்களைக் கடந்து கே.எல். ராகுல் சாதனை படைத்துள்ளார்.

மொகாலி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இத்தொடரின் முதலாவது போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் 208 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி கேமரூன் கிரீன், மேத்யூ வேட் ஆகியோரின் மிரட்டலான ஆட்டத்தால் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2,000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார். அவர் இந்த சாதனையை தனது 58-வது இன்னிங்ஸ்சில் நிகழ்த்தியுள்ளார்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் விராட் கோலி உள்ளார். கோலி தனது 56-வது சர்வதேச டி20 இன்னிங்ஸ்சில் 2,000 ரன்களை கடந்தார். மேலும் ரோஹித் சர்மா, ஹர்மன்ப்ரீத் கவுர், மிதாலி ராஜ் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோரும் சர்வதேச டி20 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இந்த பட்டியலில் பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் முதல் இடத்தில் உள்ளனர். இருவரும் இந்த சாதனையை தங்களின் 52-வது இன்னிங்ஸில் படைத்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக கோலி மற்றும் ராகுல் உள்ளனர்.


Next Story