மகளிர் கிரிக்கெட்; முதல் முறையாக தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்த பாகிஸ்தான்
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
கராச்சி,
தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் (50 ஓவர்) தொடர்களில் விளையாடி வருகிறது. அதன்படி முதலில் டி20 தொடர் நடைபெற்றது. அதில் முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் அடித்தது. பின்னர் 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி தென்னாப்பிரிக்க அணியை ஓயிட்வாஷ் செய்தது. மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்வது இதுதான் முதல்முறை.
அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 8ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது.