உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: 2-வது நாள் முடிவில் இந்தியா 151 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறல்


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: 2-வது நாள் முடிவில் இந்தியா 151 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறல்
x
தினத்தந்தி 8 Jun 2023 6:16 PM GMT (Updated: 9 Jun 2023 12:57 AM GMT)

2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

லண்டன்,

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்மித் 121 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பாக முகமது சிராஜ் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களிலும், கில் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 14 ரன்களும், புஜாரா 14 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில், அடுத்து களமிறங்கிய ஜடேஜா மற்றும் ரஹானே இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

அரை சதத்தை நோக்கி முன்னேறிய ஜடேஜா 48 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத் தொடர்ந்து இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்துள்ளது. ரஹானே(29 ரன்கள்) மற்றும் பரத் (5 ரன்கள்) களத்தில் உள்ளனர். இந்திய அணி 318 ரன்கள் பின்னிலையில் விளையாடுகிறது.


Next Story