ரசிகர்களை நோக்கி சட்டையை வீசிய ரொனால்டோவுக்கு மஞ்சள் அட்டை


ரசிகர்களை நோக்கி சட்டையை வீசிய ரொனால்டோவுக்கு மஞ்சள் அட்டை
x
தினத்தந்தி 2 Oct 2021 12:12 AM GMT (Updated: 2 Oct 2021 12:12 AM GMT)

வெற்றியின் ஆர்ப்பரிப்பில் ரசிகர்களை நோக்கி சட்டையை வீசிய ரொனால்டோவுக்கு நடுவர் மஞ்சள் அட்டை காட்டி எச்சரித்தார்.

மான்செஸ்டர்,

கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு மான்செஸ்டரில் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் (எப் பிரிவு) மான்செஸ்டர் யுனைடெட் (இங்கிலாந்து)- வில்லாரியல் (ஸ்பெயின்) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்த நிலையில் கடைசி நிமிடத்தில் மான்செஸ்டர் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ கோல் அடித்து அசத்தினார். கம்பத்தை நெருங்கி வந்து எதிரணி வீரர்களை ஏமாற்றி சக வீரர் லிங்கார்டு தட்டிக்கொடுத்த பந்தை ரொனால்டோ லாவகமாக வலைக்குள் செலுத்தினார். 

இதனால் யுனைடெட் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கோல் அடித்ததும் வெற்றியின் ஆர்ப்பரிப்பில் சட்டையை கழற்றி சுழட்டிய ரொனால்டோ அதை ரசிகர்களை நோக்கி வீசினார். இதையடுத்து அவருக்கு நடுவர் மஞ்சள் அட்டை காட்டி எச்சரித்தார். சட்டையில்லா கொண்டாட்டத்துக்காக இந்த மாதத்தில் ரொனால்டோ பெற்ற 2-வது மஞ்சள் அட்டை இதுவாகும். இந்த போட்டியில் களம் இறங்கியதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக ஆட்டங்களில் பங்கேற்றவர் (178 ஆட்டம்) என்ற சாதனையை 36 வயதான ரொனால்டோ படைத்தார்.

Next Story