தெற்காசிய கால்பந்து இறுதிப்போட்டி: இந்தியா-நேபாளம் இன்று மோதல்


தெற்காசிய கால்பந்து இறுதிப்போட்டி: இந்தியா-நேபாளம் இன்று மோதல்
x
தினத்தந்தி 15 Oct 2021 9:41 PM GMT (Updated: 15 Oct 2021 9:41 PM GMT)

தெற்காசிய கால்பந்து போட்டியில் 8-வது பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி இன்று நேபாளத்தை சந்திக்கிறது.

மாலே,

13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் நடந்து வருகிறது. 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இரு லீக் ஆட்டங்களில் வங்காளதேசம், இலங்கையுடன் ‘டிரா’ கண்டது. அடுத்த ஆட்டத்தில் நேபாளத்தை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் கண்ட இந்திய அணி கடைசி லீக்கில் 3-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் மாலத்தீவை விரட்டியடித்தது. இதில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி இரட்டை கோல் அடித்து தனது சர்வதேச கோல்களின் எண்ணிக்கையை 79 ஆக உயர்த்தினார். அத்துடன் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் 77 கோல்களுடன் 9-வது இடத்தில் இடத்தில் இருந்த பிரேசில் ஜாம்பவான் பீலேவை பின்னுக்கு தள்ளினார்.

இந்த நிலையில் சாம்பியன் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இன்று (சனிக்கிழமை) நேபாளத்தை சந்திக்கிறது. 7 முறை சாம்பியனான இந்திய அணி 8-வது பட்டத்துக்கு குறி வைத்துள்ளது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கண்டால் இகோர் ஸ்டிமாக்கின் பயிற்சியின் கீழ் இந்தியா வென்ற முதல் பட்டமாக இருக்கும்.

சுனில் சேத்ரி கருத்து

உலக தரவரிசையில் இந்தியா 107-வது இடத்திலும், நேபாளம் 168-வது இடத்திலும் உள்ளன. ஆனாலும் முதல்முறையாக இறுதிசுற்றை எட்டியிருக்கும் நேபாளத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சக வீரர்களை இந்திய கேப்டன் சுனில் சேத்ரி எச்சரித்துள்ளார்.

37 வயதான சேத்ரி கூறுகையில், ‘நேபாள அணியில் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தாக்குதல் மற்றும் தடுப்பாட்டத்தில் ஒரு அணியாக நன்றாக செயல்படக்கூடியவர்கள். கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அவர்களுக்கு எதிராக 3 ஆட்டங்களில் (2-ல் இந்தியா வெற்றி, ஒன்றில் டிரா) விளையாடி இருக்கிறோம். ஒரு அணியாக ஒவ்வொரு ஆட்டத்திலும் கடும் சவால் அளித்திருக்கிறார்கள். எனவே இந்த ஆட்டமும் எளிதாக இருக்கப்போவதில்லை. ஆனால் ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இறுதிப்போட்டியில் எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்’ என்றார்.

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை யூரோஸ்போர்ட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story