ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, சாய்னா நேவால் தோல்வி


ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, சாய்னா நேவால் தோல்வி
x
தினத்தந்தி 21 Sep 2017 10:45 PM GMT (Updated: 21 Sep 2017 7:36 PM GMT)

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் 2-வது சுற்றில் இந்திய நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் தோல்வி கண்டனர்.

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் 2-வது சுற்றில் இந்திய நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் தோல்வி கண்டனர். இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினர்.

ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து, உலக சாம்பியன் நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) சந்தித்தார்.

உள்ளூர் ரசிகர்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் ஆடிய நஜோமி ஒகுஹரா 21-18, 21-8 என்ற நேர்செட்டில் சிந்துவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 47 நிமிடம் தேவைப்பட்டது. இதன் மூலம் கடந்த வாரம் கொரியா ஓபன் இறுதி ஆட்டத்தில் சிந்துவிடம் கண்ட தோல்விக்கு ஒகுஹரா பழிதீர்த்துக் கொண்டார். சிந்துவுக்கு எதிராக 9-வது ஆட்டத்தில் ஆடிய ஒகுஹரா அதில் பெற்ற 5-வது வெற்றி இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் சமீபத்தில் நடந்த உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 16-21, 13-21 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரினிடம் (ஸ்பெயின்) தோல்வி அடைந்து வெளியேறினார். சாய்னாவுடன் 8-வது முறையாக மோதிய கரோலினா மரின் அதில் பெற்ற 4-வது வெற்றி இதுவாகும்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 21-11 என்ற நேர்செட்டில் ஹூ யுன்னை (ஹாங்காங்) துவம்சம் செய்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்ரீகாந்த் கால்இறுதியில் உலக சாம்பியன் விக்டர் ஆக்ஸ்செல்சனை (டென்மார்க்) எதிர்கொள்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 21-16, 23-21 என்ற நேர்செட்டில் ஹூ ஜென் ஹோவை (சீன தைபே) வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். அதே சமயம் இந்திய வீரர் சமீர் வர்மா 21-10, 17-21, 15-21 என்ற செட் கணக்கில் சீன வீரர் ஷி யுகியிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார்.

கலப்பு இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி 21-13, 21-17 என்ற நேர்செட்டில் ஜப்பானின் யுகி கானேகோ-கோஹரு யோனேமோடோ இணையை வீழ்த்தி கால்இறுதியை எட்டியது.

இதற்கிடையே கொரியா ஓபன் சூப்பர் சீரிசில் வாகை சூடியதன் மூலம் நேற்று வெளியான புதிய தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சிந்துவின் சிறந்த தரவரிசை இதுவாகும். ஏற்கனவே ஏப்ரல் மாதத்திலும் அவர் 2-வது இடத்தில் இருந்திருக்கிறார்.

Next Story