துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 27 Oct 2017 8:33 PM GMT (Updated: 27 Oct 2017 8:33 PM GMT)

* சர்வதேச கால்பந்து சம்மேளன கவுன்சில் (பிபா) கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடந்தது.

* உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் அமன்பிரீத்சிங் 202.2 புள்ளிகள் குவித்து வெண்கலப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ஜிதுராய் 123.2 புள்ளிகள் பெற்று கடைசி (7-வது) இடமே பிடித்தார். ஆண்களுக்கான டபுள் டிராப் போட்டியில் இந்திய வீரர் சங்ராம் தாஹியா வெள்ளிப்பதக்கம் வென்றார். தகுதி சுற்றில் 150-க்கு 144 புள்ளிகள் திரட்டிய அவர் இறுதிப்போட்டியில் 80-க்கு 76 புள்ளிகள் சேர்த்தார்.

* ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை-தமிழ்நாடு அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (சி பிரிவு) மும்பையில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே மும்பை 374 ரன்களும், தமிழ்நாடு 450 ரன்களும் எடுத்தன. 76 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்து இருந்தது. கடைசி நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த மும்பை அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் (138 ரன்கள்), அகில் ஹெர்வட்கர் (132 ரன்கள்) சதம் விளாசினர். மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 371 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ததுடன், இந்த ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற தமிழக அணிக்கு 3 புள்ளியும், மும்பை அணிக்கு ஒரு புள்ளியும் கிடைத்தன.

* தாய்க்கு காய் கராத்தே மற்றும் கோபுடோ பள்ளி சார்பில் உலக கராத்தே தினம் சென்னை வெங்கட்நாராயணா சாலையில் உள்ள அதன் அலுவலகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதில் பயிற்சியாளர் கோபுடோ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அவரிடம் பயிற்சி பெறும் வீரர்-வீராங்கனைகள் ஷோரின் ரியு கராத்தே மற்றும் ரியு கியு கோபுடோவில் உள்ள 100 கட்டாக்களை இடைவெளியின்றி செய்து காட்டுகின்றனர்.

* நம்தேசம் பவுண்டேசன் சார்பில் பார்வையற்றவர்கள், காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதவர்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னை மைலாப்பூரில் உள்ள காதுகேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கான சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியில் இன்றும், நாளையும் நடக்கிறது.

* சர்வதேச கால்பந்து சம்மேளன கவுன்சில் (பிபா) கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடந்தது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் ‘பிபா’ தலைவர் ஜியானி இன்பான்டினோ அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது. சில சாதனைகள் தகர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்தியா கால்பந்து தேசம் மட்டுமல்ல, அது ஒரு கால்பந்து கண்டம் என்பதை இப்போது கண்டறிந்துள்ளேன். ஜூனியர் உலக கோப்பை போட்டியை இந்தியாவுக்கு ஒதுக்கியது சரியானது தான் என்பதை இந்த போட்டி உணர்த்தி இருக்கிறது. 20 வயதுக்கு உட்பட்ட உலக கோப்பை போட்டியை விட இந்த போட்டி அதிக ரசிகர்கள் வருகையில் சாதனை படைத்து இருக்கிறது. 2019-ம் ஆண்டுக்கான 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை போட்டியை நடத்த பல நாடுகள் விண்ணப்பித்துள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறும் ‘பிபா’ கவுன்சில் கூட்டத்தில் விண்ணப்பங்களை ஆராய்ந்து யாருக்கு உரிமம் வழங்குவது என்பது முடிவு எடுக்கப்படும்’ என்றார்.

Next Story