மணிப்பூர் ‘மகா’ ராணி..


மணிப்பூர் ‘மகா’ ராணி..
x
தினத்தந்தி 19 Aug 2018 8:55 AM GMT (Updated: 19 Aug 2018 8:55 AM GMT)

மணிப்பூர் மாநிலம் இம்பால் அருகில் உள்ள ஹொங்ஜோம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரிதா தேவி. 33 வயதான இவர், 2 குழந்தைகளின் தாய்.

ஆனால் அவரைக் கண்டால், ‘ஜிம்’ பயிற்சிபெறும் ஆண்களே வியந்து விடுவார்கள். அப் படிப்பட்ட கட்டுமஸ்தான உடற்கட்டுக் கொண்டவர் சரிதா தேவி. இந்தியா சார்பாக பல்வேறு பாடிபில்டிங் போட்டிகளில் பங்கெடுத்து நாட்டுக்காக பல பதக்கங்களை இவர் பெற்றுத்தந்திருக்கிறார்.

பெண் என்றால் நளினமாக, மென்மையாக இருக்க வேண்டும் என்றுதான் பெரும்பாலானவர்கள் கருதுவார்கள். கட்டுமஸ்தான உடல் பெண்களுக்கு தேவையில்லை என்றும் பலர் சொல்வார்கள். அதுபோல் இந்தெந்த செயல்கள்தான் ெபண்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் உடைத்து, பெண்களால் கட்டுமஸ்தான உடலோடு தோன்றவும் முடியும்- வலுவைக்காட்டி பதக்கங்களை வெல்லவும் முடியும் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார், சரிதா தேவி.

மிஸ்டர் இந்தியா என்ற ஆணழகன் போட்டி வருடந்தோறும் நடந்து வருகிறது. அதில் பெண்களுக்கான பிரிவில் பெண்கள் தங்கள் உடல் தோற்றத்திறனை வெளிப்படுத்துகிறார்கள். அந்த போட்டியில் 2016, 2017-ம் ஆண்டுகளில் சரிதா தேவி தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். இரண்டு முறை தங்கம் வென்றிருப்பதோடு, வெள்ளி, வெண்கலம் போன்ற பதக்கங்களையும் குவித்திருக்கிறார். ஆண்களின் வெற்றிக்கு பின்னால் பெண்கள் இருப்பதுபோன்று, இவரது வெற்றிக்கு பின்னால் இவரது கணவர் இருக் கிறார்.

‘‘எனது கணவர் தற்காப்புக்கலை நிபுணர். அவர் கொடு்த்த ஊக்கம்தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. உடன் இருந்து அவர் கொடுத்த பயிற்சியால்தான் என் உடல் தோற்றத்தையும், வலுவையும் இவ்வளவு வலுவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவரது வழிகாட்டுதலால். என் திறமைகளை ஒட்டுமொத்தமாக வலுப்படுத்திக்கொள்ளவும் முடிந்தது.’’ என்று கணவரை பெருமைப்படுத்துகிறார், சரிதா தேவி.

விளையாட்டில் ஜொலிக்க வேண்டும் என்ற கனவோடு உலவும் பெருவாரியான மணிப்பூர்வாசிகளைப் போலவே சரிதாவும் சாதாரண குடும்ப பின்னணியைக் கொண்டவர்தான். அதனால் இவர் அந்த உயரத்தை எட்டுவதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. வீட்டையே தனக்கான உடற்பயிற்சி நிலையமாக மாற்றிக் கொண்டார். வீட்டில் உள்ள உபகரணங்களைக் கொண்டே உடற்பயிற்சியை மேற்கொண்டார். அவரது பயிற்சிக்குத் தேவையான எந்த ஒரு வசதியையும் செய்து கொடுக்க முடியாத நிலையிலே அவரது குடும்பச் சூழல் இருந்துள்ளது.

மணிப்பூர் மக்களும், அங்குள்ள விளையாட்டு வீரர்கள் நலச்சங்கமும் இவருக்கு உதவியுள்ளன. அவர்கள் செய்த உதவிதான் இவரை இந்த உயரத்திற்கு கொண்டுபோயிருக்கிறது. மணிப்பூரில் சரிதாதேவியை போல் உடல்வலு கொண்ட பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களும் ‘பாடி பில்டிங்’ போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவிக்கிறார்கள். 

மதிப்புமிகுந்த மணிப்பூர்

சிறு மாநிலமான மணிப்பூர் இந்தியாவிற்கு பல திறமையான விளையாட்டு வீரர்களை வழங்கியுள்ளது. மணிப்பூரின் மொத்த மக்கள் தொகை 28 லட்சம்தான். ஆனால் விளையாட்டுத்துறைக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருது வாங்கியவர்களில் 15-க்கும் மேற்பட்டவர்கள் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள். மேலும் சீனியர், ஜூனியர், மகளிர் என அனைத்து பிரிவு கால்பந்து அணியிலும் மணிப்பூர் மக்களின் பங்கு பெருமைப்படும் அளவுக்கு இருக்கிறது. இத்தனைக்கும் அங்கு விளையாட்டிற்கு பொருத்தமான சூழல் நிலவுவதில்லை. மலைப்பிரதேசம், தீவிரவாதிகளின் ஊடுருவல், அவர்களுடன் மோதும் ராணுவம் என எப்பொழுதும் அங்கு ஒரு பதற்றமான சூழலே நிலவுகிறது. அதனை மீறி மக்கள் விளையாட்டை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களது வாழ்க்கையே ஒரு விளையாட்டாகிப் போனதுதான் அதற்கான காரணம்.

விளையாட்டு என்பது மணிப்பூர் மக்களின் பாரம்பரிய கலாசாரம் போலாகிவிட்டது. அங்கு மால், மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர் போன்று நேரத்தை விரயம் செய்வதற்கு எதுவும் இல்லை. அதனால் இளைஞர்கள் விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர். விளையாட்டில் திறமையானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காகவே அங்கு ஒரு சங்கம் செயல்பட்டு வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் இருந்து புகழ்பெற்ற வீரர்கள் அனைவருமே, அந்த சங்கத்தின் உதவியை பெற்றவர்கள்தான். அந்த சங்கத்தை சேர்ந்தவர்களே, வீரர் களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கிறார்கள்.

கால்பந்து, குத்துச்சண்டை, ஆக்கி, பளுதூக்குதல், பாரம் பரிய தற்காப்புக் கலைகள் போன்று எல்லா விளையாட்டுகளிலும் மணிப்பூர் மக்கள் ஆர்வமாக ஈடுபடுகிறார்கள். வெளிநாடுகளிலும் புகழ்பெற்ற ‘போலோ’ விளையாட்டு மணிப்பூரில்தான் தோன்றியது.

விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கும், விளையாட்டு அமைப்புகளுக்கும் மணிப்பூர் மக்கள் தங்கள் ஏகோபித்த ஆதரவை அளிக்கிறார்கள். மக்களின் ஆதரவுடன் இந்த மாநிலம் எங்கும் சுமார் ஆயிரம் விளையாட்டு கிளப்களும் சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றன

Next Story