ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: 2–வது சுற்றில் சிந்து அதிர்ச்சி தோல்வி


ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: 2–வது சுற்றில் சிந்து அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 13 Sep 2018 11:30 PM GMT (Updated: 13 Sep 2018 9:47 PM GMT)

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் 2–வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

டோக்கியோ, 

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் 2–வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

சிந்து அதிர்ச்சி தோல்வி

முன்னணி வீரர்–வீராங்கனைகள் பங்கேற்றுள்ள ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதன் 3–வது நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக தரவரிசையில் 3–வது இடத்தில் இருப்பவருமான இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தர வரிசையில் 14–வது இடத்தில் உள்ள சீனாவின் பான்ஜிவ் காவை சந்தித்தார்.

55 நிமிடம் விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 18–21, 19–21 என்ற நேர்செட்டில் பான்ஜிவ் காவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

கால்இறுதியில் ஸ்ரீகாந்த்

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 8–வது இடத்தில் உள்ள இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21–15, 21–14 என்ற நேர்செட்டில் 27–ம் நிலை வீரர் வோங் விங் கி வின்சென்டை (ஹாங்காங்) வீழ்த்தி கால்இறுதிக்குள் கால் பதித்தார். இந்த வெற்றியை பெற ஸ்ரீகாந்துக்கு 36 நிமிடமே தேவைப்பட்டது. கால் இறுதியில் ஸ்ரீகாந்த், 33–ம் நிலை வீரர் லீ டோங் குன்னை (தென்கொரியா) எதிர்கொள்கிறார்.

மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 13–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரனாய் 14–21, 17–21 என்ற நேர்செட்டில் 10–வது இடத்தில் உள்ள அந்தோணி சினிசுகா ஜின்டிங்கிடம் (இந்தோனேஷியா) தோல்வி கண்டு நடையை கட்டினார். இந்த ஆட்டம் 48 மணி நேரம் நீடித்தது.

இந்திய ஜோடிகள் தோல்வி

ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மனு அட்ரி–சுமீத் ரெட்டி ஜோடி 18–21, 21–16, 12–21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹீ ஜிட்டிங்–டான் கியாங் இணையிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தது. இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா–சிக்கி ரெட்டி இணை மலேசியாவின் சன் பெங் சூன்–கோஹ் லி யிங் ஜோடியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்–வீராங்கனைகளில் ஸ்ரீகாந்த் தவிர மற்ற அனைவரும் மூட்டை முடிச்சுகளை கட்டி விட்டனர்.


Next Story