புரோ கபடி: உ.பி.யோத்தா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் நடப்பு சாம்பியன் பாட்னா வெளியேறியது


புரோ கபடி: உ.பி.யோத்தா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் நடப்பு சாம்பியன் பாட்னா வெளியேறியது
x
தினத்தந்தி 27 Dec 2018 11:00 PM GMT (Updated: 27 Dec 2018 7:39 PM GMT)

புரோ கபடியில் உ.பி. யோத்தா அணி கடைசி லீக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் வெளியேறியது.

கொல்கத்தா,

12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த 131-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 40-32 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை தோற்கடித்தது.

இதைத் தொடர்ந்து அரங்கேறிய மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி, பெங்கால் வாரியர்சை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியுடன் கோதாவில் குதித்த உ.பி.யோத்தா அணியினர் தொடக்கம் முதலே அபாரமாக ஆடினர். மளமளவென புள்ளிகளை திரட்டிய அவர்கள் முதல் பாதியில் 19-11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றனர். அந்த முன்னிலையை கடைசி வரை தக்க வைத்துக் கொண்டனர்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 41-25 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை நொறுக்கியது. உ.பி. அணியில் அதிகபட்சமாக ரிஷாங் தேவாடிகா 9 புள்ளிகள் சேர்த்தார். உ.பி.யோத்தா அணி 8 வெற்றி, 10 தோல்வி, 4 ‘டை’ என்று மொத்தம் 57 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் 3-வது இடத்தை பிடித்து கடைசி அணியாக அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைந்தது.

இந்த ஆட்டத்தில் உ.பி. யோத்தா அணி தோற்றால் மட்டுமே தங்களுக்கு வாய்ப்பு என்று காத்திருந்த 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. புரோ கபடியில் பாட்னா அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.

லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் குஜராத், யு மும்பா, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் அடுத்த சுற்றை எட்டியுள்ளன.

பிளே-ஆப் சுற்றில் கொச்சியில் நாளை மறுதினம் நடக்கும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டங்களில் யு மும்பா-உ.பி. யோத்தா, தபாங் டெல்லி- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

Next Story