உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: கடைசி நாளில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: கடைசி நாளில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்
x
தினத்தந்தி 30 May 2019 10:30 PM GMT (Updated: 30 May 2019 9:34 PM GMT)

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் ஒரு வார காலமாக நடந்து வந்தது.

முனிச், 

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் ஒரு வார காலமாக நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் அஞ்சும் மோட்ஜில்–திவ்யனாஷ் சிங் பன்வார் ஜோடி 16–2 என்ற கணக்கில் சக நாட்டு ஜோடியான அபுர்வி சண்டிலா– தீபக்குமார் இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. அபுர்வி–தீபக்குமார் ஜோடிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதே போல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர ஜோடியான சவுரப் சவுத்ரி – மானுபாகெர் ஆகியோர் அனுபவம் வாய்ந்த உக்ரைனின் கோஸ்டெவிச்–ஒமெல்சக் ஜோடியை 17–9 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினர்.

இந்த போட்டியில் இந்தியா மொத்தம் 5 தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் முதலிடத்தை பிடித்தது. உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மிகச்சிறந்த செயல்பாடு இதுவாகும். சீனா 2 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என்று 9 பதக்கத்துடன் 2–வது இடத்தை பெற்றது.


Next Story