ஜப்பானில் இருந்து கிரீசுக்கு ஒலிம்பிக் தீபத்தை பெற சிறப்பு விமானம் புறப்பட்டது


ஜப்பானில் இருந்து கிரீசுக்கு ஒலிம்பிக் தீபத்தை பெற சிறப்பு விமானம் புறப்பட்டது
x
தினத்தந்தி 19 March 2020 3:36 AM GMT (Updated: 19 March 2020 3:36 AM GMT)

ஒலிம்பிக் தீபத்தை பெற்றுக்கொள்வதற்காக சிறப்பு விமானம் ஜப்பானில் இருந்து கிரீசுக்கு புறப்பட்டு சென்றது.

டோக்கியோ, 

32-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடத்தப்படுகிறது. கொரோனா வைரசின் கோரப்பிடி உலகம் முழுவதும் பெரும் கலக்கத்தை உருவாக்கி விட்டதால் ஒலிம்பிக் போட்டி நடக்குமா? நடக்காதா? என்று அவ்வப்போது சர்ச்சை கிளம்புகிறது. ஆனால், ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டப்படி நடத்துவதில் உறுதியுடன் இருக்கிறோம். இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் இப்போதைக்கு எந்த கடினமான முடிவும் (ரத்து அல்லது தள்ளிவைப்பது) எடுக்கப்போவதில்லை என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டி ரத்தானால் ஜப்பானுக்கு ஏறக்குறைய ரூ.97 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

ஆனாலும் 56 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்து இருக்கும் ஒலிம்பிக் வாய்ப்பை நழுவ விட்டு விடக்கூடாது என்பதில் ஜப்பான் அரசாங்கமும் எல்லாவிதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

வழக்கமாக ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன்பாக ஒலிம்பிக் தீபம் அது பிறந்த நாடான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் ஏற்றப்படுவது வழக்கம். இதன்படி கடந்த 12-ந்தேதி ஒலிம்பிக் தீபம் ஒலிம்பியாவில் பாரம்பரிய முறைப்படி ஏற்றப்பட்டது. பிறகு ஒலிம்பிக் தீபம் ஒரு வாரம் கிரீஸ் நாட்டில் தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சத்தால் ஒலிம்பிக் ஜோதியின் தொடர் ஓட்டம் ஓரிரு நாட்களுடன் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஒலிம்பிக் தீபத்தை பெற்றுக்கொள்வதற்காக ஜப்பானில் இருந்து ‘டோக்கியோ 2020’ என்ற பெயருடன் சிறப்பு விமானம் நேற்று கிரீஸ் நாட்டுக்கு புறப்பட்டது. முதலில் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் யோஷிரோ மோரி, ஒலிம்பிக் மந்திரி செய்கோ ஹஷிமோட்டோ மற்றும் முன்னணி நிர்வாகிகள் அங்கு செல்வதாக இருந்தது. ஆனால் கொரோனா பயத்தால் ஒலிம்பிக் குழுவினர் யாரும் செல்லவில்லை.

ஏற்கனவே கிரீசுக்கு சென்றிருந்த ஒலிம்பிக் அதிகாரிகள் இன்று தீபத்திற்குரிய பேட்டனை பெற்றுக்கொண்டு அங்கிருந்து ஜப்பானுக்கு திரும்புகிறார்கள்.

இதற்கிடையே சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் நேற்று அளித்த பேட்டியில், ‘கொரோனா தாக்கத்தால் தற்போது அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. அதை சமாளிக்க அசாத்தியமான தீர்வு தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் வீரர்கள் இடையே எதிர்மறை எண்ணம் ஏற்படாத வகையில் அதற்குரிய தீர்வு காண ஒலிம்பிக் கவுன்சில் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் போட்டியின் ஒருமைப்பாட்டுக்கும், வீரர்களின் பாதுகாப்புக்கும் பங்கம் வராத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆனாலும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப தெளிவான ஒரு தீர்வு கிடைக்கவில்லை’ என்றார்.

ஒலிம்பிக் கவுன்சிலின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஒலிம்பிக் சாம்பியனான கிரீஸ் நாட்டின் போல்வால்ட் வீராங்கனை கேத்ரினா ஸ்டீபானிதி கூறுகையில், ‘ஒலிம்பிக் கவுன்சில் வீரர், வீராங்கனைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பொதுமக்களின் சுகாதார விஷயத்தில் தொடர்ந்து ரிஸ்க் எடுக்க விரும்புகிறது. இப்போது எங்களை அபாயகட்டத்துக்கு தள்ளுகிறார்கள். ஒரு வேளை ஒலிம்பிக் போட்டி நடக்காவிட்டால் அடுத்து என்ன முடிவு செய்வீர்கள் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ஏனெனில் நாங்கள் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் தான் பயிற்சி எடுத்து வருகிறோம்’ என்றார்.

Next Story