ஒலிம்பிக் போட்டிக்கு புறப்படும் முன்பாக இந்திய அணியினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு விடும்: இந்திய ஒலிம்பிக் சங்கம்


ஒலிம்பிக் போட்டிக்கு புறப்படும் முன்பாக இந்திய அணியினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு விடும்: இந்திய ஒலிம்பிக் சங்கம்
x

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர், வீராங்கனைகள், பயிற்சி குழுவினா், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் டோக்கியோவுக்கு புறப்படும் முன்பாக கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்பட்டு விடும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்பு குழுவுக்கு உறுதி அளித்துள்ளது.

இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா, பொதுச்செயலாளர் ராஜீவ் மேக்தா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு முக்கியமானதாகும். இந்திய அணியில் இடம் பிடித்து இருக்கும் அனைவரும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடிந்த அளவுக்கு இந்திய ஒலிம்பிம் சங்கம் எடுக்கும். ஒலிம்பிக் போட்டிக்கு புறப்படுவதற்கு முன்பாக இந்திய அணியினர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு விடும். ஏறக்குறைய எல்லோரும் தடுப்பூசியின் முதலாவது டோசை எடுத்து விட்டனர். நடைமுறைப்படி அடுத்த டோசை எடுத்து கொள்வார்கள். ஒலிம்பிக்கை முழுமையான பாதுகாப்புடன் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story