வெள்ளகோவில் அருகே மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி தொடங்கியது - பிரித்விராஜ் தொண்டைமான் முதலிடம்


வெள்ளகோவில் அருகே மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி தொடங்கியது - பிரித்விராஜ் தொண்டைமான் முதலிடம்
x
தினத்தந்தி 2 Oct 2021 12:12 AM GMT (Updated: 2 Oct 2021 12:12 AM GMT)

வெள்ளகோவில் அருகே மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நேற்று தொடங்கியது.

திருப்பூர்,

கொங்குநாடு ரைபிள் கிளப் மற்றும் தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கம் சார்பில் ஷாட் கன் பிரிவில் மாநில அளவிலான 47-வது துப்பாக்கி சுடுதல் போட்டி திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள கொங்குநாடு ரைபிள் கிளப் துப்பாக்கி சுடும் தளத்தில் நேற்று தொடங்கியது. மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் துப்பாக்கி சுடுதல் தளத்தை திறந்ததுடன், போட்டிகளையும் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் வேல்சங்கர் முன்னிலை வகித்தார். கொங்குநாடு ரைபிள் கிளப் தலைவர் சிவசுப்பிரமணியம், செயலாளர் லோகேஷ்வரன், பொருளாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்கீட், டபுள் டிராப், டிராப் ஆகிய 3 பிரிவுகளில் வருகிற 5-ந்தேதி வரை போட்டிகள் நடக்கிறது.. இதில் 140-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். முதல் நாளான நேற்று ஸ்கீட் பிரிவில், சர்வதேச போட்டியில் பதக்கம் வென்றவரான புதுக்கோட்டையை சேர்ந்த பிரித்விராஜ் தொண்டைமான் உள்பட 23 பேர் களம் கண்டனர். அவர்கள் பறந்து சென்ற தட்டுகளை குறி பார்த்து சுட்டு வீழ்த்தினார்கள்.

ஆண்கள் தனிநபர் பிரிவில் பிரித்விராஜ் தொண்டைமான் முதலிடத்தையும், விஜய் சாமுவேல் வில்சன் 2-வது இடத்தையும், முகமது ஜமில் உபயத்துல்லா 3-வது இடத்தையும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் நிலா ராஜா பாலு முதலிடத்தையும், நர்மதா தேவி 2-வது இடத்தையும் பெற்றனர். மூத்தோர் ஆண்கள் பிரிவில் நடராஜன் வெற்றி பெற்றார். ஜூனியர் பெண்கள் பிரிவில் நிலா ராஜா பாலு முதலிடத்தையும், இதன் ஆண்கள் பிரிவில் சந்தோஷ்குமார் செந்தில்குமரன் முதலிடத்தையும், சூர்யா ராஜா பாலு 2-வது இடத்தையும் பெற்றனர்.

சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அனுபவம் வாய்ந்தவரான பிரித்விராஜ் தொண்டைமான் கூறும்போது, ‘தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க செல்வதற்கான தேர்வு போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ளது. சென்னை, புதுக்கோட்டையை அடுத்து திருப்பூர் மாவட்டத்தில் இந்த தளம் இருப்பதால் மேற்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் பயிற்சி பெற வசதியாக இருக்கும்’ என்றார்.

Next Story