தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் : வெள்ளி பதக்கம் வென்றார் கீதா போகத்


தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் : வெள்ளி பதக்கம் வென்றார் கீதா போகத்
x
தினத்தந்தி 12 Nov 2021 12:19 PM GMT (Updated: 12 Nov 2021 12:19 PM GMT)

தங்கல் திரைப்படம் கீதா போகத் மற்றும் அவரது சகோதரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும்.

கோண்டா,

தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி உத்தரபிரதேசத்தில் உள்ள கோண்டா நகரில் நேற்று தொடங்கியது.இதில் 59 கிலோ எடைப்பிரிவில்  இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் கீதா போகத்  வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

ஹரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை கீதா போகத். இவர் 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை  வென்று தந்தவர். அது மட்டுமின்றி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை ஆவார்.

2016 ஆம் ஆண்டு  அமீர் கானின் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற  திரைப்படம் தங்கல். இந்த திரைப்படம் கீதா போகத் மற்றும் அவரது சகோதரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பின்  இறுதிப் போட்டியில் அவர் சரிதா மோரை எதிர்கொண்டார் .போட்டியின் தொடக்கத்தில் இருந்தே  ஆதிக்கம் செலுத்திய சரிதா இறுதியில் 8-0 என்ற கணக்கில் கீதா போகத்தை வீழ்த்தினார்.இதனால்  கீதா போகத் வெள்ளி பதக்கம் வென்றார்.ஒரு குழந்தைக்கு தாயான பிறகு கீதா போகத் பங்கேற்கும் முதல் தொடர் இதுவாகும்.

இது குறித்து கீதா போகத் கூறியதாவது :

இனி மல்யுத்த போட்டிகளில் பங்கேற்பதற்கு எனது வயது ஒத்துழைக்காது என பலர் கூறினர். மக்கள் பலர் எப்படி இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் இது போன்ற  விஷயங்களை என்னிடம் தொடர்ந்து சொல்கிறார்கள்.

 அஜர்பைஜானின்  மரியா ஸ்டாட்னிகை பாருங்கள். அவர் 33 வயதுக்கும்  மேற்பட்டவர் மற்றும் இரண்டு குழந்தைகளுக்குத் தாய். அவர் நான்கு ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்றுள்ளார் . உங்களுக்கு நன்றான உடற்தகுதி இருந்தால் நிச்சயம் நீங்கள் போட்டிகளில் வெற்றி பெறலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story