புரோ கபடி: ஒரே நாளில் ‘டை’யில் முடிந்த 3 ஆட்டங்கள்


புரோ கபடி: ஒரே நாளில் ‘டை’யில் முடிந்த 3 ஆட்டங்கள்
x
தினத்தந்தி 1 Jan 2022 10:54 PM GMT (Updated: 1 Jan 2022 10:54 PM GMT)

புரோ கபடியில் நேற்று ஒரே நாளில் பரபரப்பான 3 ஆட்டங்களும் ‘டை’ யில் முடிந்தது.

பெங்களூரு, 

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 25-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை அணி (யு மும்பா), உ.பி.யோத்தாவை எதிர்கொண்டது. இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை எடுத்ததால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்தது. முதல் பாதியில் மும்பை 16-13 என்று முன்னிலை பெற்றிருந்தது. பிற்பாதியில் சரிவில் இருந்து மீண்ட உ.பி.யோத்தா அணியினர் 24-24 என்று சமநிலைக்கு கொண்டு வந்தனர். அதன் பிறகு 26-26, 28-28 என்றும் சமநிலை நீடித்தது. ஆட்டம் முடிய 41 வினாடிகள் இருந்த போது ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பாத இரு அணி வீரர்களும் தங்களது கடைசி ரைடுகளில் யாரையும் அவுட் செய்யாமல் வெறுமையுடன் திரும்பினர்.

இதனால் திரிலிங்கான இந்த ஆட்டம் 28-28 என்ற புள்ளி கணக்கில் சமனில் (டை) முடிந்தது. அதிகபட்சமாக மும்பை அணியில் அஜித் 9 புள்ளிகளும், உ.பி. அணியில் சுரேந்தர் கில் 8 புள்ளிகளும் எடுத்தனர். 5-வது ஆட்டத்தில் விளையாடிய மும்பை அணி 2 வெற்றி, ஒரு தோல்வி, 2 ‘டை’ என்று 17 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

கோட்டைவிட்ட டைட்டன்ஸ்

இதைத் தொடர்ந்து நடந்த தெலுங்கு டைட்டன்ஸ்- பெங்களூரு புல்ஸ் இடையிலான ஆட்டத்திலும் இரு அணி வீரர்களும் நீயா-நானா என்று வரிந்து கட்டியதால் விறுவிறுப்பு எகிறியது. ஆட்டத்தின் கடைசியில் ஒரு நிமிடம் இருந்த போது தெலுங்கு டைட்டன்ஸ் 34-32 என்று முன்னிலையில் இருந்தது. வெற்றியின் விளிம்பில் இருந்த தெலுங்கு அணியினர் கடைசி தருணத்தில் வெற்றியை கோட்டை விட்டனர்.

அதாவது ஒரு புள்ளி முன்னிலையில் இருந்த நிலையில் தெலுங்கு டைட்டன்ஸ் கேப்டன் ரோகித் குமார் தனது கடைசி ரைடில் நேரத்தை கடத்தி விட்டு வந்திருக்கலாம். ஆனால் தேவையில்லாமல் எதிரணி வீரர்களை அவுட் ஆக்க முயற்சித்து சிக்கி கொண்டார். இதனால் இந்த ஆட்டமும் 34-34 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது.

தலைவாஸ் ஆட்டமும் டை

ஆச்சரியம் அளிக்கும் வகையில் தமிழ் தலைவாஸ்- தபாங் டெல்லி இடையிலான மற்றொரு ஆட்டமும் டையில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் தலைவாஸ் அணி ஒரு கட்டத்தில் 14-9 என்று முன்னிலை பெற்றிருந்தது. அதன் பிறகு மஞ்ஜீத் சூப்பர் டேக்கிள்சில் டெல்லி வீரர்களிடம் மாட்டிக் கொண்டார். அதில் இருந்து எழுச்சி கண்ட டெல்லி அணியினர் மளமளவென புள்ளிகளை திரட்டினர். குறிப்பாக மீண்டும் களம் புகுந்த நவீன்குமார் இந்த ஆட்டத்திலும் 10 புள்ளிகளுக்கு மேல் எடுத்து அசத்தினார். நவீன் தொடர்ந்து 26-வது முறையாக சூப்பர்-10 புள்ளி எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஜாலத்தால் டெல்லி 28-20 என்று வலுவான முன்னிலைக்கு உயர்ந்தது.

இதன் பிறகு தலைவாஸ் வீரர்கள் அடுத்தடுத்து 3 முறை சூப்பர் டேக்கிள்சில் டெல்லி ரைடர்களை மடக்கி பிடித்து தலா 2 புள்ளிகள் வீதம் எடுத்து உத்வேகம் அடைந்தனர். 30-29 என்று முன்னிலைக்கும் வந்தனர். ஆனால் இறுதி கட்டத்தில் டெல்லி வீரர் சந்தீப் நார்வல் ரைடில் ஒரு புள்ளி எடுத்ததால் இந்த ஆட்டம் 30-30 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது. நவீன்குமார் 15 புள்ளிகள் எடுத்தும் அந்த அணிக்கு பலன் இல்லாமல் போனது. 5-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 3 டை என்று 15 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. தபாங் டெல்லி முதலிடத்தில் (3 வெற்றி, 2 டையுடன் 21 புள்ளி) நீடிக்கிறது.

இன்றைய ஆட்டங்களில் குஜராத் ஜெயன்ட்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 7.30 மணி), புனேரி பால்டன்-பெங்களூரு புல்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story