அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச், மெட்விடேவ்... அல்காரஸ் வெளியேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச், மெட்விடேவ்... அல்காரஸ் வெளியேற்றம்
x
தினத்தந்தி 9 Sep 2023 8:00 PM GMT (Updated: 9 Sep 2023 9:53 PM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். நடப்பு சாம்பியன் அல்காரஸ் அரைஇறுதியில் தோற்று வெளியேறினார்.

ஜோகோவிச் அசத்தல்

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரும், 2-ம் தரநிலை வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 47-வது இடத்தில் உள்ள 20 வயது அமெரிக்க வீரர் பென் ஷெல்டனை எதிர்கொண்டார்.

2 மணி 41 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் எதிர்பார்த்தபடி ஜோகோவிச் 6-3, 6-2, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் பென் ஷெல்டனை விரட்டியடித்து 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். முதல் 2 செட்டை எளிதாக தனதாக்கிய ஜோகோவிச்சுக்கு கடைசி செட்டில் பென் ஷெல்டன் சவால் அளித்ததால் ஆட்டம் ரைபிரேக்கர் வரை நீடித்தது. அமெரிக்க வீரருக்கு எதிராக ஜோகோவிச் தொடர்ச்சியாக ருசித்த 31-வது வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடினமாக இருக்கும்

ஒட்டுமொத்தத்தில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 36 வயதான ஜோகோவிச் இறுதி சுற்றை எட்டுவது இது 36-வது முறையாகும். ஒரு ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருப்பது இது 3-வது தடவையாகும். அவர் ஏற்கனவே 2015, 2021-ம் ஆண்டுகளிலும் இதேபோல் அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருந்தார்.

அல்காரஸ் தோல்வி

மற்றொரு அரைஇறுதியில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவரும், 2021-ம் ஆண்டு சாம்பியனுமான டேனில் மெட்விடேவ் (ரஷியா), நடப்பு சாம்பியனும், தரநிலையில் முதலிடத்தில் இருப்பவருமான கார்லஸ் அல்காரஸ்சை (ஸ்பெயின்) சந்தித்தார்.

3 மணி 19 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மெட்விடேவ் 7-6 (7-3), 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் அல்காரஸ்சுக்கு அதிர்ச்சி அளித்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அவர் இறுதி சுற்றுக்குள் நுழைவது இது 5-வது முறையாகும்.

ஜோகோவிச்-மெட்விடேவ் மோதல்

இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ஜோகோவிச்-மெட்விடேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இவர்கள் இருவரும் இதுவரை 14 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றனர். இதில் 9 ஆட்டங்களில் ஜோகோவிச்சும், 5 ஆட்டங்களில் மெட்விடேவும் வென்றுள்ளனர். 2021-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் மெட்விடேவ் நேர்செட்டில் ஜோகோவிச்சை வீழ்த்தி இருந்ததும் இதில் அடங்கும். இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 2, 3 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஒற்றையர் பிரிவில் மகுடம் சூடுபவருக்கு ரூ.24¾ கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் வீரருக்கு ரூ.12 ½ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.


Next Story