ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்திய சஹால்- கொல்கத்தா அணியை வீழ்த்தி ராஜஸ்தான் திரில் வெற்றி


Image Courtesy : BCCI / IPL
x
Image Courtesy : BCCI / IPL
தினத்தந்தி 18 April 2022 6:10 PM GMT (Updated: 18 April 2022 6:10 PM GMT)

ராஜஸ்தான் அணி தரப்பில் யுஸ்வேந்திர சஹால் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

மும்பை,

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர் - தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். ஏற்கனவே இந்த தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் முன்னணி வகிக்கும் பட்லர் இந்த போட்டியிலும் வந்த வேகத்தில் பவுண்டரிகளாக விளாசினார்.

அதிரடியாக விளையாடிய அவர் 29 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் விளையாடி வந்த தேவ்தத் படிக்கல் 17 பந்துகளில் 23 ரன்கள் அடித்து நரேன் பந்துவீச்சில் வெளியேறினார்.

இதை தொடர்ந்து சாம்சன் களமிறங்கினர். பட்லர் உடன் இணைந்து இவரும் பவுண்டரிகளாக அடித்தார். 19 பந்துகளில் 38 ரன்கள் குவித்து சாம்சன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசத்திய பட்லர் 59 பந்துகளில் சதம் அடித்தார். இதன்மூலம் அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் 2-வது சதத்தை பூர்த்தி செய்தார். 61 பந்துகளில் 103 குவித்து அவர் கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். 

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்துள்ளது. 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய நரேன் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட்டாகினார். மற்றொரு தொடக்க வீரருடன் பின்ச் உடன் ஜோடி சேர்ந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் கொல்கத்தா அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ஆரோன் பின்ச் 58 ரன்கள் குவித்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் வெளியேறினார்.

ஷ்ரேயஸ் அய்யர் தனது  அதிரடியை தொடர நிதிஷ் ராணா 18 ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த ரசல் தனது முதல் பந்திலே அஸ்வின் சுழலில் போல்டானார்.

ஒரு முனையில் விக்கெட்கள் சரிந்தாலும் ஷ்ரேயஸ் அய்யர் சிக்சர் பவுண்டரிகள் அடிப்பதை நிறுத்தவில்லை. பின்னர் 17-வது ஓவரை வீசிய யுஸ்வேந்திர சஹால் ஒரே ஓவரில் ஷ்ரேயஸ் அய்யர் (85 ரன்கள்), கம்மின்ஸ் , மாவி விக்கெட்களை (ஹாட்ரிக்) வீழ்த்தி போட்டியை ராஜஸ்தான் பக்கம் திருப்பினார்.

இறுதி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 3 ரன்கள் மட்டுமே அடித்தநிலையில் கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணி தரப்பில் யுஸ்வேந்திர சஹால் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

Next Story