தொடக்க ஆட்டக்காரர் நரேந்திரமோடி!


தொடக்க ஆட்டக்காரர் நரேந்திரமோடி!
x

இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்காத நிலையில், பா.ஜனதா 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

வருகிற ஏப்ரல், மே மாதங்களில் 18-வது மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதிலும் உள்ள 543 தொகுதிகளில் நடைபெற இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் இன்னும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் இருக்கின்றன. இந்த நேரத்தில், கிரிக்கெட் மைதானத்தில் ஆட்டம் எப்போது தொடங்கும்? என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, தொடக்க ஆட்டக்காரர் கையில் பேட்டுடன் களம் இறங்கும்போது ஏற்படும் ஆரவாரம் போல, இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்காத நிலையில், பா.ஜனதா 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

'தொடக்க ஆட்டக்காரர் நான்தான்' என்பதை நரேந்திரமோடி நிரூபித்துவிட்டார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தேர்தல் ஆணையம் 7 கட்ட தேர்தலுக்கான தேதியை அறிவித்த பிறகுதான், பா.ஜனதா தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. அதன்பிறகு, பா.ஜனதா தனது நடைமுறையை மாற்றிக்கொண்டு, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ஜார்கண்ட், தெலுங்கானா மாநிலங்களில், கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.

2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜனதா 303 இடங்களில் வெற்றி பெற்றது. இப்போது நரேந்திரமோடி, "நாங்கள் 370 இடங்களில் தனியாக வெற்றி பெறுவோம். தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும்" என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். வேட்பாளர் பட்டியலை பார்த்தால், நரேந்திரமோடி 3-வது முறையாக உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் களம் காண்கிறார். அமித்ஷா மீண்டும் குஜராத் மாநிலம் காந்தி நகரிலும், ராஜ்நாத்சிங் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலும் போட்டியிடுகிறார்கள். கடந்த தேர்தலில் ராகுல்காந்தியை தோற்கடித்த ஸ்மிரிதி இரானி, அதே அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள 195 வேட்பாளர்களில் 114 பேர் கடந்த தேர்தலில் போட்டியிட்டவர்கள். 34 பேர் மத்திய மந்திரிகள், 3 பேர் முன்னாள் முதல்-மந்திரிகள், 167 பேர் ஆண்கள், 28 பேர் பெண்கள், 47 பேர் 50 வயதுக்கு குறைந்தவர்கள், 27 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், 18 பேர் பழங்குடியினர், 57 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். 2014, 2019-ம் ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தல்களில் பா.ஜனதா வேட்பாளராக முஸ்லிம் எவரும் அறிவிக்கப்படாத நிலையில், இப்போது கேரள மாநிலம் மலப்புரம் தொகுதியில் அப்துல் சலாம் என்பவர் போட்டியிடுகிறார்.

இந்த வேட்பாளர் பட்டியலை பா.ஜனதாவின் மத்திய தேர்தல் குழு கடந்த 29-ந்தேதி இரவு, 5 மணி நேரத்துக்கு மேல் ஆலோசனை நடத்தி அறிவித்துள்ளது. இந்த 195 இடங்களில் பா.ஜனதா 193-ல் கடந்த தேர்தலின்போது போட்டியிட்டு 151 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 24 தொகுதிகளில் 2-வது இடத்தையும், 18 தொகுதிகளில் 3-வது இடத்தையும் பிடித்தது. மத்திய தேர்தல் குழுவின் அடுத்த கூட்டம் நாளை நடக்கிறது. 2-வது பட்டியல் அதில் தயாராகிவிடும். பிரதமர் நரேந்திரமோடியின் வேகத்தை பார்த்தால், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிடுவார்கள் என்று தெரிகிறது. தொடக்க ஆட்டக்காரர் பேட்டை சுழற்ற தொடங்கிவிட்டார். அந்த அணியின் ஆட்டமும், எதிர் அணியின் ஆட்டமும் எப்படி இருக்கப்போகிறது? என்பது தேர்தலின்போது தெரிந்துவிடும்.


Next Story