எல்லாவற்றுக்கும் கால நிர்ணயம் வேண்டும்!


எல்லாவற்றுக்கும் கால நிர்ணயம் வேண்டும்!
x

இப்போதெல்லாம் மக்களுக்கு மட்டுமல்ல, மாநில அரசுகளின் எல்லா பிரச்சினைகளுக்கும் இறுதி தீர்வு சுப்ரீம் கோர்ட்டை நாடினால்தான் கிடைக்கிறது.

இப்போதெல்லாம் மக்களுக்கு மட்டுமல்ல, மாநில அரசுகளின் எல்லா பிரச்சினைகளுக்கும் இறுதி தீர்வு சுப்ரீம் கோர்ட்டை நாடினால்தான் கிடைக்கிறது. பா.ஜனதா அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அந்த அரசுகளுக்கும், கவர்னர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இதில் மத்திய அரசாங்கம் தலையிட்டு ஒரு சுமுக தீர்வை வழங்காத நிலையில், மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டையே நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழகத்தில், பொன்முடியை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்ய மறுத்த கவர்னர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. சுப்ரீம் கோர்ட்டு கவர்னர் மீது கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன் 24 மணி நேரம் விதித்த கெடுவுக்கு பிறகே கவர்னர் ஆர்.என்.ரவி, பொன்முடிக்கு உயர் கல்வித்துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இப்போது கேரள அரசாங்கம், அந்த மாநில கவர்னர் மீது மட்டுமல்ல, மசோதாக்களை நிறுத்திவைத்திருக்கும் ஜனாதிபதி நடவடிக்கைக்கு எதிராகவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. அங்கு ஆரிப் முகமதுகான் கவர்னராக இருக்கிறார். அவருக்கும், பினராயி விஜயன் தலைமையிலான மாநில அரசாங்கத்துக்கும் இடையே மோதல் இருந்துவருகிறது. மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் பல மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தராமல் கிடப்பிலேயே வைத்திருப்பதாக கேரள அரசாங்கம் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.

இந்த வழக்கு தொடரப்பட்டவுடன் கவர்னர் 7 மசோதாக்களை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துவிட்டார். இதில் 3 மசோதாக்களுக்கு கடந்த மாதம் ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். மீதமுள்ள 3 பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதாக்கள், ஒரு கூட்டுறவு சங்க திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவில்லை. இதை எதிர்த்து கேரள அரசாங்கம் தொடர்ந்துள்ள வழக்கில், "இந்த 4 மசோதாக்களுமே மாநில அரசாங்கத்தின் சட்ட வரைமுறைக்குள் வருவது. இதற்கு ஒப்புதல் அளிக்காமல், ஜனாதிபதி நிறுத்திவைத்திருப்பது அரசியல் சட்டத்தை மீறிய செயலாகும். கவர்னரும் கிடப்பில் போட்டு வைத்திருப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஒரு தெளிவான வழிகாட்டுதல்களை அனைத்து மாநிலங்களும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் எதிர்பார்க்கின்றன. அரசியல் சட்டத்தில், மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு எவ்வளவு காலத்துக்குள் கவர்னர் பதில் அனுப்பவேண்டும்? எந்தெந்த வகையான மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பலாம்? அந்த மசோதாக்களுக்கு எவ்வளவு காலத்துக்குள் தீர்வு காணப்படவேண்டும்? என்பதற்கெல்லாம் காலக்கெடு நிர்ணயிக்கவில்லை.

இதேபோல், சமீபத்தில் கர்நாடக அரசாங்கம் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, தங்களுக்கு வறட்சி நிவாரண நிதி கோரி 5 மாதங்கள் ஆகியும் இன்னும் மத்திய அரசாங்கம் தரவில்லையென்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதேபோல, வெள்ள நிவாரண நிதியை தமிழக அரசுக்கு மத்திய அரசாங்கம் இன்னமும் தராமல் இருப்பதை எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாங்குநேரியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அறிவித்துவிட்டார்.

எனவே, இந்த விவகாரங்களுக்கும் ஒரு காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கினால், அரசியல் சட்டத்திருத்தங்களை செய்யவும், நிவாரண நிதியை குறித்த காலத்துக்குள் பெறவும் உதவியாக இருக்கும். இப்போது அனைத்து மாநிலங்களின் கண்களும் சுப்ரீம் கோர்ட்டை நோக்கியே இருக்கிறது.


Next Story