இது பிரதமர் நரேந்திரமோடியின் சாதனை !


இது பிரதமர் நரேந்திரமோடியின் சாதனை !
x

வீடுகளில் விறகு அடுப்பு வைத்தும், கரிஅடுப்பு வைத்தும் சமையல் செய்துகொண்டிருக்கும் பெண்களுக்கு அதிலிருந்து வரும் புகையால் கண்ணீர் விட்டுக்கொண்டே வேலை செய்யும் நிலை ஏற்படும்.

வீடுகளில் விறகு அடுப்பு வைத்தும், கரிஅடுப்பு வைத்தும் சமையல் செய்துகொண்டிருக்கும் பெண்களுக்கு அதிலிருந்து வரும் புகையால் கண்ணீர் விட்டுக்கொண்டே வேலை செய்யும் நிலை ஏற்படும். மேலும் 'மரம் வளர்ப்போம், மழைவளம் சேர்ப்போம்' என்று உறுதி எடுத்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், விறகுக்காக மரங்களை வெட்டவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. இந்தநிலையில், பெரிய வரப்பிரசாதமாக கியாஸ் சிலிண்டர் வந்து, சமையல் செய்யும் இல்லத்தரசிகளின் வாழ்வில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது. புகையில்லா சமையல், கஷ்டமில்லாத சமையல் என்றே பெண்கள் கருதினர்.

ஆனால், சமையல் கியாஸ் சிலிண்டர் பெற டெபாசிட் தொகை, இணைப்பு கட்டணம் கட்டவேண்டும், அதன்பிறகு சிலிண்டருக்கும் விலை இருக்கிறது. இவ்வளவு தொகையை கட்டமுடியாத ஏழை குடும்பங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. இப்படிப்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பெண்களுக்காக டெபாசிட்டும், இணைப்பு கட்டணமும் இல்லாமல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் "பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம்'' 2016-ம் ஆண்டு மே மாதம் 1-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடியால் தொடங்கிவைக்கப்பட்டது.

இந்த திட்டத்தின்கீழ் சமையல் கியாஸ் அடுப்பு மற்றும் முதல் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த சிலிண்டர்கள் மானியவிலையில் வழங்கப்படுகிறது. தொடக்கத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 5 கோடி பெண்களுக்கு இந்த இலவச சிலிண்டர் இணைப்பு வழங்குவதுதான் இலக்காக இருந்தது. அவ்வப்போது இந்த திட்டக்காலம் நீட்டிக்கப்பட்டு இணைப்புகளின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மந்திரிசபை கூட்டத்தில், இந்த உஜ்வாலா யோஜனா திட்டம், 2025-2026-ம் நிதியாண்டு வரை நீட்டிக்கவும், கூடுதலாக 75 லட்சம் இணைப்புகளை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில், அந்த 3 ஆண்டுகள் முடிவில் இந்த திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 10 கோடியே 35 லட்சமாக உயரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மிகவேகமாக இணைப்புகள் வழங்கப்பட்டு, மிகப்பெரிய சாதனையாக இப்போதே 10 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.

சில நாட்களுக்கு முன்பு அயோத்திக்கு ரெயில் நிலையத்தையும், புதிய விமான நிலையத்தையும் திறப்பதற்காக சென்றிருந்த பிரதமர் நரேந்திரமோடி, அங்கு உஜ்வாலா திட்டத்தின்கீழ் 10 கோடியாவது இணைப்பை பெற்ற மீரா மாஞ்சி என்ற மீனவ பெண்ணின் வீட்டுக்கு சொல்லிக்கொள்ளாமலேயே சென்றார். அந்த வீட்டில் 15 நிமிடங்கள் இருந்த பிரதமர், அந்த பெண் கொடுத்த டீயை மகிழ்ச்சியுடன் குடித்துவிட்டு, அவர்களுடன் சற்றுநேரம் பேசிவிட்டு புறப்பட்டு சென்றார்.

நாட்டில் இப்போது 10 கோடி ஏழை பெண்களால், வீடுகளில் மண்எண்ணெய், விறகு அடுப்பு, காற்று மாசு, புகை ஆகியவை இல்லாமல் சமையல் செய்ய முடிகிறது என்பது பிரதமர் நரேந்திரமோடியின் மிகப்பெரிய சாதனையாகும். தமிழ்நாட்டில் இப்போது 32 லட்சத்து 43 ஆயிரத்து 190 பெண்கள் இந்த இலவச சமையல் கியாஸ் இணைப்பை பெற்றுள்ளார்கள். தமிழக அரசு கணக்குப்படி, இன்னும் 30 லட்சம் குடும்பங்களில் சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு இல்லை. இந்த திட்டம் பற்றி தெரியாத மலைவாழ் மக்களும், கிராமப்புற பெண்களும் தமிழ்நாட்டில் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இவ்வளவு வேகமாக இலவச இணைப்புகளை வழங்கிவரும் மத்தியஅரசாங்கம் தமிழ்நாட்டில் எங்குமே விறகு அடுப்பில்லை என்ற நிலையை விரைவில் உருவாக்கவேண்டும்.


Next Story