‘‘தமிழகத்தில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்’’; நடிகர் கமல்ஹாசன் விருப்பம்

‘‘தமிழகத்தில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்’’ என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Update: 2017-02-19 20:23 GMT

சென்னை,

கமல்ஹாசன் கருத்து

நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசியல் நிலவரம் குறித்து சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கருத்துகள் பதிவிட்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்திடம் எந்த தகுதியின்மையும் இருப்பதாக தெரியவில்லை என்றும் எனவே அவரே முதல்–அமைச்சராக நீடிக்க வேண்டும் என்றும் கருத்து கூறினார்.

‘‘தமிழக மக்களே உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.க்களை அவர்களது வீடுகளில் என்ன வரவேற்பு கிடைக்குமோ அதுமாதிரி வரவேற்க தயாராகுங்கள்’’ என்று இன்னொரு செய்தியில் கூறியிருந்தார். தொடர்ந்து, ‘‘உங்கள் மன உளைச்சலை கவர்னருக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பி வையுங்கள்’’ என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று ஆங்கில தொலைக்காட்சிக்கு கமல்ஹாசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:–

ஊழல் வழக்கு

‘‘ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் சசிகலா தண்டிக்கப்பட்டு இருக்கிறார். முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதும் குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது சசிகலாவை சார்ந்தவர்களால் எடப்பாடி பழனிசாமி இந்த மாநிலத்தின் முதல்–அமைச்சராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி தன் மீது சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தில் அவர் வெற்றி பெற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நம்பிக்கை தீர்மானத்தில் வேண்டுமானால் அவர் வென்று இருக்கலாம். ஆனால் தெருக்களில் உள்ள உணர்ச்சி கொந்தளிப்பானது வேறு எதையோ குறிப்பிடுவதுபோல் இருக்கிறது.

தேர்தல்

நமது சட்டசபை தூய்மையாக இருப்பது நமக்கு தேவை. மக்கள் தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நான் அரசியலுக்கு வருவேனா? என்று கேட்கப்படுகிறது. என்னை பொறுத்தவரை நான் அரசியலுக்கு தகுதி இல்லாதவன். நான் மிகவும் கோபக்காரன். கோபப்படுகிறவர்கள் அரசியலுக்கு லாயக்கு இல்லாதவர்கள். தற்போது நானும் கோபமாக இருக்கிறேன். மக்களும் கோபமாக இருக்கிறார்கள். எதையும் நடுநிலையோடு அணுகும் அரசியல்வாதிகள் நமக்கு தேவையாக இருக்கிறார்கள்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்