“நடிகைகளை கேவலமாக காட்டாதீர்கள்” படவிழாவில், நடிகை ஜோதிகா பேச்சு

‘நடிகைகளை கேவலமான காட்சிகளில் நடிக்க வைக் காமல் டைரக்டர்கள் சமூக பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்” என்று படவிழாவில் நடிகை ஜோதிகா கேட்டுக்கொண்டார்.

Update: 2017-04-24 23:45 GMT
சென்னை,

ஜோதிகா நடித்துள்ள புதிய படம் ‘மகளிர் மட்டும்.’ நாசர், லிவிங்ஸ்டன், ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். பிரம்மா டைரக்டு செய்துள்ளார். நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகை ஜோதிகா கலந்து கொண்டு பேசியதாவது:-

“எனக்கு திருமணம் முடிந்து 10 வருடங்களுக்கு பிறகு ஒரு தடவைதான் சூர்யாவுக்கு தோசை சுட்டு கொடுத்து இருக்கிறேன். மீண்டும் நடிப்பதற்கும் இந்த இடத்தில் நின்று பேசுவதற்கும் சூர்யாதான் காரணம். எனக்கு உதவியாக இருக்கும் நடிகர் சிவகுமார் குடும்பத்தின் அத்தனை ஆண்களுக்கும் நன்றி. எனக்கு இந்த படத்தில் சிறந்த கதாபாத்திரம் தந்து இளமையாக காட்டி இருக்கிறார், இயக்குனர் பிரம்மா.

30 வயது நடிகைகள்

பொதுவாக 30 வயதை தாண்டிய நடிகைகளை இயக்குனர்கள் கதாநாயகியாக அங்கீகரிக்காமல் தாய், அண்ணி கதாபாத்திரங்கள் என்று ஒதுக்கி வைப்பார்கள். கதாநாயகர்களைத்தான் வயதான பிறகும் இளமையாக காட்டுவார்கள். இந்த படத்தில் கதாநாயகர்களுக்கு இணையாக எனக்கு முக்கியத்துவம் தரப்பட்டு உள்ளது.

இது பெண்கள் பற்றிய படம் ஊர்வசி, சரண்யா பொண்வண்ணன், பானுப்ரியா ஆகியோரும் என்னுடன் இணைந்து சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். சரண்யா பொன்வண்ணனின் இரண்டு மகள்கள் மருத்துவம் படிக்கிறார்கள். எனக்கும் இரண்டு குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்புகளுக்கு மத்தியில் இந்த படத்தில், ஈடுபாட்டுடன் நடித்து இருக்கிறோம்.

டைரக்டர்கள்

டைரக்டர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உங்கள் படங்களில் நடிகைகளை கண்ணியமாக காட்டுங்கள். வீட்டில் அம்மா, தங்கை என்று உங்களை சுற்றி இருக்கும் பெண்களை மனதில் வைத்து கதாபாத்திரங்களை உருவாக்குங்கள். கதாநாயகர்களுக்குத்தான் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகைகளுக்கு அப்படி இல்லை. சினிமா இளைஞர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

எனவே நடிகைகளுக்கு வீட்டில் இருக்கும் பெண்களைப்போல் ஆடைகள் உடுத்தி அவர்களை அறிவாளிகளாக படத்தில் காட்டுங்கள். சில படங்களில் நடிகைகளை அறிமுக காட்சிகளில் கேவலமாக காட்டுகிறார்கள். இரட்டை அர்த்த வசனம் பேசுகிறார்கள். கதாநாயகனை சுற்றி ஓட வேண்டும். காதலிக்க வேண்டும் என்கிறார்கள். முன்பெல்லாம் ஒரு கதாநாயகனுக்கு ஒரு கதாநாயகி இருந்தார். அதன்பிறகு இரண்டு மூன்று கதா நாயகிகளாகி, இப்போது 4 கதாநாயகிகள் என்று போகிறது.

சமூக பொறுப்பு

டைரக்டர்கள் சமூக பொறுப் புணர்வோடு நடந்து நல்ல படத்தை தாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு ஜோதிகா பேசினார்.

விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது, “ஜோதிகா சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்டு என்னுடைய அடுத்தடுத்த படங்களில் பின்பற்றுவேன். நான் தயாரிக்கும் படங்களை பொறுப்புணர்வோடு எடுப்பேன். நான் இதுவரை தயாரித்த படங்களில் மகளிர் மட்டும் படத்தை சிறப்பான படமாக கருதுகிறேன்” என்றார்.

விழாவில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, லிவிங்ஸ்டன், நடிகை நக்மா, டைரக்டர்கள் தரணி, பாண்டிராஜ், தயாரிப்பாளர்கள் கே.ஈ.ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, ராஜசேகர், கிறிஸ்டி சிலுவப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்