"ரஜினி, கமலுக்கு அடுத்து விஜய்..."- ஜனநாயகன் சென்சார் விவகாரம் குறித்து நடிகர் தம்பி ராமையா கருத்து
நடிகர் தம்பி ராமையா , ஜனநாயகன் பட சென்சார் விவகாரம் குறித்து பேசினார்.;
சென்னை,
ஜனநாயகன் பட சென்சார் விவகாரம் குறித்து ‘தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் தம்பி ராமையா பேசினார்.
ஜீவா தன் 45-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இயக்கிய இப்படத்திற்கு, 'தலைவர் தம்பி தலைமையில்' எனப் பெயரிட்டுள்ளனர். இதன் முதல் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது. இதில், நாயகியாக பிரார்தனாவும் தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 15-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் தம்பி ராமையா , ஜனநாயகன் பட சென்சார் விவகாரம் குறித்து பேசினார். அவர் பேசுகையில்,
"தமிழ் திரைப்பட வியாபாரத்தை அகலப்படுத்தியதில் ரஜினி, கமலுக்கு அடுத்து விஜய் சாருக்கு முக்கிய பங்கு உண்டு. ஜனநாயகன் படம் முடங்கி இருக்கிறபோது சினிமாவை நேசிப்பவர்கள் அத்தனை பேரும் கவலைப்படத்தான் செய்வார்கள்" என்றார்.