‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் 19 இடங்களில் வெட்டு
ஆரியும் ஆஷ்னா சவேரியும், நாகேஷ் திரையரங்கம் படத்தில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்.;
‘நெடுஞ்சாலை’ புகழ் ஆரியும், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,’ ‘இனிமே இப்படித்தான்’ ஆகிய படங்களில் நடித்த ஆஷ்னா சவேரியும், ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். ஒரே ‘ஷாட்’டில் எடுக்கப்பட்ட ‘அகடம்’ படத்தை இயக்கி, ‘கின்னஸ்’ சாதனை படைத்த இசாக் டைரக்டு செய்துள்ள படம், இது. ‘நாகேஷ் திரையரங்கம்’ பற்றி இசாக் கூறுகிறார்:-
“இந்த படத்தில், ஆரி கதாநாயகனாக நடித்து இருக்கிறார். கதாநாயகி, ஆஷ்னா சவேரி. இவர்களுடன் காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர், மனோபாலா, சித்ராலட்சுமணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் லதாவும், சித்தாராவும் நடித்து இருக்கிறார்கள். நவுஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையில் படம் உருவாகி இருக்கிறது. ட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனம் சார்பில் ராஜேந்திர எம்.ராஜன் தயாரித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இன்று வரை எண்ணற்ற திகில் படங்களும், பேய் படங்களும் வந்திருந்தாலும், அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில், கதை-திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் பேய் என்ற புதிய கோணத்தில், படம் உருவாகி இருக்கிறது. படம், தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பதாக கூறிய தணிக்கை குழுவினர், 19 இடங்களை வெட்டி நீக்கிவிட்டு, ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்.”