கொரோனாவில் தப்பிக்க கைகூப்பி வணக்கம் பிரியங்கா சோப்ரா யோசனை

கொரோனாவில் இருந்து தப்பிக்க உலக மக்கள் கைகளை கூப்பி வணக்கம் சொல்ல வேண்டும் என்று பிரியங்கா சோப்ரா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Update: 2020-03-13 22:45 GMT
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை தாக்கி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். திரையுலகமும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் தனக்கும், தனது மனைவியும் நடிகையுமான ரீட்டா வில்சனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார்.

இது ஹாலிவுட் பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ரிலீசையும் தள்ளி வைத்துள்ளனர். பல்வேறு நாடுகள் படப்பிடிப்புகளுக்கு தடை விதித்துள்ளன. கேரளாவில் திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன.

பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே பாரிசில் நடந்துவரும் ஆடை அலங்கார கண்காட்சி நிகழ்ச்சிக்கு செல்ல இருந்தார். பிரான்சிலும் கொரோனா பரவியதால் பயணத்தை அவர் ரத்து செய்துவிட்டார். இந்த நிலையில் இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்துவரும் பிரியங்கா சோப்ரா, ‘கொரோனாவில் இருந்து தப்பிக்க உலக மக்கள் இனிமேல் கைகளை கூப்பி வணக்கம் சொல்ல வேண்டும்’ என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதோடு ஏற்கனவே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது இரு கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்த தனது புகைப்படங்களை சேகரித்து வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார். கொரோனாவில் இருந்து தப்பிக்க வணக்கம் சொல்வதுதான் சிறந்த வழி என்றும் தெரிவித்துள்ளார். பிரியங்கா சோப்ரா சொல்வது நல்ல யோசனை என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்